தூத்துக்குடி: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் பல்வேறு கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை இன்று (ஜூலை 1) ஆய்வு செய்தார். அப்போது அவருடன் தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செந்தில்ராஜ், வளர்ச்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது, ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உதவி ஆட்சியர் சரவணன் ஆகியோர் இருந்தனர்.
ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன், “கிராமங்களில் மக்களுக்குத் தேவையான சாலை, குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு போன்ற கட்டமைப்புகளைத் தாண்டி, கிராமப் பகுதியில் மக்கள் வருவாய் ஈட்டுவதற்காக தொடங்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடந்த ஆண்டு 20,000 கோடி ரூபாய் கடன் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இலக்கை தாண்டி 21,200 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு சுய உதவிக்குழுவினருக்கு 25,000 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் அதனை நிறைவேற்றுவோம். முந்தைய ஆட்சியில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் கடலூர், திருச்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சமத்துவபுரங்களை, 190 கோடி ரூபாய் செலவில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.