தூத்துக்குடி: கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இன்று (செப்.12) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம், எல்லை நாயக்கன்பட்டி துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "தமிழ்நாட்டில் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதன்மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு அலுவலர்கள் நியமனம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 805 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு, 55 ஆயிரத்து 272 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான செயல் திறனைக் கருத்தில்கொண்டு கூடுதலாக தடுப்பூசி வழங்கப்பட்டு 74 ஆயிரத்து 730 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் டிவி பரிசாக வழங்கும் நடவடிக்கை, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கைத் தாண்டி சாதனை படைப்போம் என நம்புகிறோம். தடுப்பூசி முகாம்களை கண்காணிக்க சிறப்பு அலுவலர்களையும் நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.