தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள கழுகுமலையில் சமத்துவ மக்கள் கட்சி கிளை செயலாளர் செந்தூர் பாண்டியன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் இணைத்துக்கொண்டனர்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜு, ”மக்கள் சக்தி படைத்த தலைவராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தார். ஆகையால் அவர் தேர்தலின்போது ஹெலிகாப்டர் மூலமாக ஆங்காங்கே வந்து பரப்புரை மேற்கொண்டார். ஆனால் மு.க. ஸ்டாலின் ஹெலிகாப்டர் இல்லை. ராக்கெட்டில் வந்தால்கூட அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் கடந்த மூன்று வருடங்களாக வரியில்லாத பட்ஜெட் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கியபோதிலும் கடன் சுமையை மக்கள் மீது திணிக்கவில்லை, அரசே ஏற்றுக்கொள்கிறது.
பதவி ஆசை இருக்கலாம் பதவி வெறி இருக்கக்கூடாது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சட்டப்பேரவையில் திமுகவினர் செய்த ரகளை தொடர்பான வீடியோக்கள் விரைவில் வெளியிடப்படும். அதை மக்கள் பார்க்கும்போதுதான் திமுகவிற்கு பதவி வெறி எப்படி உள்ளது என்பது தெரியும். அதிமுக மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறும். மூன்றாவது முறையாக தொடர்ந்து மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையுடன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.