தூத்துக்குடி: திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "பிரதமர் மோடி எல்லா நேரமும் வெளிநாடு போகிறார். ஆனால் அமெரிக்க பயணமானது, அரசாங்கத்தின் தனி விருந்தினராக அவர் அழைக்கப்பட்டு உலகில் மிகச் சில தலைவர்களுக்கே கிடைத்த மரியாதை அவருக்கு கிடைத்திருக்கிறது.
அது மட்டுமல்ல, அங்கு சென்ற ஒவ்வொரு நிமிடமும் நமது நாட்டின் வளர்ச்சியை உலகிற்கு தெளிவுப்படுத்துவதில் அமெரிக்க நாட்டின் ஒத்துழைப்பு நமது வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு இருக்கும் என்பதையும், இந்தியா - அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு எந்த அளவுக்கு இருக்கும் என்பதையும் ஒரு பிரமாண்டமான வெளிநாட்டு பயணம் என்று தான் சொல்ல வேண்டும்.
அதுவும் எகிப்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் அங்கு சென்று இருக்கின்றார். எகிப்தின் உயரிய விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய திருநாட்டிற்கு, பெருநாட்டிற்கு ஒரு பெயர் என்று தான் சொல்ல வேண்டும். உலகத்தில் மிகப் பிரபலமான தலைவர் என்ற பெருமையை பிரதமர் பெற்றிருக்கிறார். முன்னர் எந்த தீர்வாக இருந்தாலும், எதற்கு தீர்வு என்றாலும் இந்தியா மற்ற நாடுகளை எதிர்நோக்கி இருந்தது. ஆனால் இன்று மற்ற நாடுகள் இந்தியாவை நோக்கி பார்வையை செலுத்துவது நமது பிரதமரின் மிகப்பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் சென்றால் சாதனை என்கின்றனர். பிரதமர் வெளிநாட்டு பயணம் சென்றால் விமர்சனம் செய்கிறார்கள். தற்போது எல்லோருக்கும் தெரியும். வெளிநாட்டு பயணம் செய்துவிட்டு வந்து முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்ல எந்த அளவிற்கு மற்ற நாடுகளின் துணை நமக்கு கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேலும், தென்பகுதி இன்னும் வளர்ச்சியடைய வேண்டும். நேற்று முன்தினம் வந்தே பாரத் 25வது ரயில் பெட்டி பெரம்பூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. முதலில் எல்லாம் இந்த பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் இந்த ரயில் பெட்டிகள் நமது நாட்டில் தயாரிக்கப்பட்டு, நமது நாட்டிற்கு மட்டுமல்ல வெளிநாட்டிற்கு ஏற்றுமதி ஆகிறது. நேபால் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.