தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தின் தந்தையாக போற்றப்படுபவர், குரூஸ் பர்ணாந்து. இவரது பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 24-ல் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, குரூஸ் பர்ணாந்து பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்தது.
பின்னர், தேர்தல் கால கட்டத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால், குரூஸ் பர்ணாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன், குரூஸ் பர்ணாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
அந்த வகையில், தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். பூங்கா அருகில் ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்துக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, கடந்த ஜனவரி 21ஆம் தேதி நடைபெற்றது. ரூ.77.87 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு, 376 சதுர அடி பரப்பில் முழு உருவச் சிலையுடன் கூடிய மண்டபமும், மண்டபத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பேவர் பிளாக், புல்வெளி மற்றும் சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மணிமண்டபத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.11.2023) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.
குரூஸ் பர்ணாந்து வாழ்க்கை வரலாறு: தூத்துக்குடியில் ஜான் சாந்த குரூஸ் பர்ணாந்து தம்பதிகளுக்கு மகனாய் 15.11.1869 ஆம் ஆண்டு குரூஸ் பர்ணாந்து பிறந்தார். தூய சவேரியார் பள்ளியில் கடந்த 1885 ஆம் ஆண்டு மெட்ரிகுலேசன் படிப்பை முடித்தார். படிப்பை முடித்தவுடன் வால்காட் கம்பெனியில் கணக்கராக வேலையில் சேர்ந்தார். பின்னர், தொபியால் அம்மாளை மணந்து இல்லறம் நடத்தி, ஏழு குழந்தைகளின் தந்தையானார்.
பின்னர், வால்காட் (Walcott) கம்பெனியிலும், ராலி (Raleigh) கம்பெனியிலும் பணிபுரியும் போது நாட்டின் பிற பகுதிகளில் வந்த பஞ்சு பண்டல் சாம்பிலினைக் காசாக்கிக் கொள்ளாமல் நண்பர் ஏ.எம்.எம் சின்னமணி நாடாரிடம் அனுப்பி வைத்து அவற்றை நூலாக்கி விற்று வரும் பணத்தை ஏழை எளிய மக்களுக்கு செலவிட்டு வந்தார். பின், செல்விஜர் என்ற ஐரோப்பியரின் நம்பிக்கையைப் பெற்று படிப்படியாக முன்னேறினார்.
இந்த செல்விஜர் என்பவர் தூத்துக்குடி நகர சபையில் ஐரோப்பியரின் பிரதிநிதியாக இருந்தவர். அவருடன் நகர்மன்ற கூட்டங்களுக்கு உதவியாளராக சென்ற குரூஸ் பர்ணாந்து சமூக பணி செய்ய வேண்டும் என்று ஆர்வம் கொண்டு மக்களுக்கு நல உதவிகளை செய்தார்.
கல்விக்கு உதவி கேட்டு யார் வந்தாலும் குரூஸ் பர்ணாந்து சீட்டு கொடுத்து விடுவதாக கூறப்படுகிறது. அந்த சீட்டு மூலம் சின்னமணி நாடார் உடனே பண உதவி செய்து விடுவார். இந்த பணியில் ஈர்க்கப்பட்ட சின்னமணி நாடார் தாமே கல்வி சேவையில் இறங்கி ஆரம்பித்த பள்ளியும், ஆசிரமமும் தற்போது வ.உ.சி கல்லூரி அருகே சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
குரூஸ் பர்ணாந்து ஆற்றிய பணிகள்:கடந்த1922ஆம் ஆண்டில் சென்னை சட்டமன்றத்தில் ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி பிரதிநிதியாக குரூஸ் பர்ணாந்து இருந்து உள்ளார். பேபி ஹோம் ஆரம்பித்து சுகாதார கட்டமைப்பை உருவாக்கி உள்ளார். கஷ்டப்படுகிறவர்கள் கடன் உதவி பெற கூட்டுறவு சங்கம் ஆரம்பித்து உள்ளார்.