தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முருகனுக்கே விபூதியா? திருச்செந்தூர் கோயிலில் நடப்பது என்ன? - highcout

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 4 வகை தரிசனம், கட்டண கொள்ளை என புகார்கள் நீண்ட நிலையில் , நீதிமன்றம் போட்ட தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள், பலனளித்துள்ளதா? பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் பெறுகின்றனரா? - தொடர் கட்டுரைகளில் காணலாம்.

soorasamharam, tiruchendur, murugan,
திருச்செந்தூர் முருகன் கோயிலின் எழில்மிகு தோற்றம்

By

Published : Apr 11, 2022, 7:49 PM IST

Updated : Apr 13, 2022, 7:16 PM IST

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமானது திருச்செந்தூர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு, தமிழ்க்கடவுளான முருகன் சூரசம்ஹாரம் புரிந்த தலம் எனப் பல்வேறு சிறப்புகளை கொண்டது திருச்செந்தூர்.

"குரு"ஸ்தலம் என அழைக்கப்படுவதால் ஜோதிட ரீதியாக நம்பிக்கை கொண்டவர்களும் தவறாது தரிசனம் செய்தே தீர வேண்டும் என்ற ஆவலுடன் திருச்செந்தூரை நோக்கி நாள் தோறும் குவிந்து வருகின்றனர்.

சிறப்பான நாள்கள்:சூரசம்ஹாரம் நடைபெற்ற தலமாக அறியப்படுவதால் ஜப்பசி மாதம் நடைபெறும் சஷ்டி விரத நாள்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் சூரசம்ஹார நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிகின்றனர். இது தவிர வருடத்தின் அனைத்து மாதங்களிலும் திருச்செந்தூர் முருகனுக்கு திருவிழாக் கோலம் தான்.

பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர்

சித்திரை மாதத்தில் மே மாத விடுமுறைக்கால கூட்டம், வைகாசியில் விசாகம், ஆடி அமாவாசை, , ஆவணியில் உற்சவம், கார்த்திகை, மார்கழியில் ஐயப்ப பக்தர்களின் படையெடுப்பு, தைப்பூசம், மாசிப்பெருந்திருவிழா, பங்குனி உத்திரம் என வருடத்தின் அனைத்து மாதங்களிலும் ஏதோ ஒரு விழாவை காணும் சிறப்பு திருச்செந்தூருக்கு உள்ளது. விசேஷ நாள்களில் லட்சக்கணக்கிலும், சாதாரண நாள்களில் ஆயிரக்கணக்கிலும் பக்தர்கள் வருகை உள்ளது.

ராஜகோபுர பின்னணியில் ஜெயந்திநாதர்

ஊருக்குள் நுழைவதே போராட்டம் தான்:இவ்வளவு பக்தர்கள் வருகை உள்ள நிலையிலும் தரிசனம் என்பது அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை. வெளியூரிலிருந்து திருச்செந்தூர் வரும் பக்தர்களுக்கு ஊருக்குள் நுழைவதே போராட்டம் தான்.

வாகனங்களின் எண்ணிக்கை பெருத்து விட்ட சூழலிலும் அதே பழைய குறுகலான மற்றும் நெரிசலான ரதவீதிகளின் வழியாகவே நடைபயணமாக வரும் பக்தர்களும், பேருந்துகளும் ஒரு சேர அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் கார்களில் வருவோர், அதிகாலையிலேயே டோல் கேட் திறப்பதற்காக 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு காத்திருப்பதை விசேஷ மற்றும் விடுமுறை நாள்களில் எளிதாக காணலாம்.
எந்தத் தரிசனம் எவ்வளவு?:இதனைத் தாண்டி கோயிலை நெருங்கும் போதுதான் அடுத்த டாஸ்க் தயாராக இருக்கும். ஓட்டல் மெனுகார்ட் போல சாதா, ஸ்பெஷல் சாதா, சிறப்பு, ஸ்பெஷல் சிறப்பு என 4 வகை தரிசன வரிசைகள் இருந்தன.

அதாவது தர்மதரிசனம் எனப்படும் இலவச தரிசனம், 20 ரூபாய் வரிசை, 100 ரூபாய் வரிசை இது போக 250 ரூபாய்க்கு மணியடி தரிசனம். இலவச தரிசனமும், 20 ரூபாய் தரிசனமும், முருகன் சன்னிதிக்கு முன்புறம் இருக்கும் மயில் சிலை வரை மட்டுமே செல்லும், 20 ரூபாயில் கூட்டம் சற்று குறைவாக இருப்பதால் தரிசனம் கொஞ்சம் விரைவாக கிடைக்கும்.

100 ரூபாய் தரிசனத்தில் இதனைக் காட்டிலும் கொஞ்சம் முன்னால் சென்று தரிசிக்க அனுமதிப்பார்கள். 250 ரூபாய் தரிசனத்தில் மணியடி என்று சொல்லப்படும் கர்ப்பகிரகத்திலிருந்து வெளியே வரும் வாயிலில் அமர வைக்கப்பட்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

சூரனை வதம் புறப்படும் ஜெயந்திநாதர்
பணத்தைக் கொட்டும் மணியடி தரிசனம்:இந்த மணியடி தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதில் தான் பெரும் முறைகேடு புகார்கள் எழுந்தன. பணத்தை கொட்டும் கட்டளைதாரர்கள், தனி நபர்கள் எந்த தடையும் இல்லாமல் மணியடியில் நேரடியாக உட்கார்ந்து தரிசனம் செய்து வந்தனர்.

இது தவிர எல்லோரும் வரிசையில் காத்திருக்க கோயிலின் வட புறம் வள்ளிகுகைக்கு எதிரே பூட்டப்பட்டிருக்கும் வாயிலைத் திறந்து, இதன் வழியே அழைத்து வந்து முறைகேடாக வரிசைகளுக்குள் பாதியில் புகுத்தி விடும் காட்சிகளும் சாதாரணமாக காணக்கிடைத்தன.

நீதிமன்றம் போட்ட கிடுக்குப்பிடி:இந்த நிலையில் தான் இறைவனின் முன் அனைவரும் சமம், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விஐபிக்களை கடவுளே மன்னிக்க மாட்டார் என்பது போன்ற கருத்துக்களை கூறி விஐபி தரிசனத்திற்கு முட்டுக்கட்டை போட்டது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

அத்தோடு ரூ.20 மற்றும் ரூ.250 கட்டண தரிசனங்களுக்கு தடை போடப்பட்டு, இலவச தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அத்தோடு வடக்கு வாசலும் வலுவாக பூட்டப்பட்டு, அதிகாரப்பூர்வமற்ற வரிசை முடக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவு பக்தர்களுக்கு பலன் அளித்ததா? விஐபி கலாசாரம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒழிந்து விட்டதா? பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்து செல்கின்றனரா? கோயில் பிரச்சனை நீதிமன்றம் வரையிலும் செல்வதற்கு காரணம் என்ன? கோயிலில் பிரதான கர்ப்ப கிரக பூஜை பணிகளில் இல்லாவிட்டாலும் புகார்களில் சிக்கும் திரிசுதந்திர பிராமணர்கள் யார்? போன்ற கேள்விகளுக்கான விடையை நாளையகட்டுரையில் காணலாம்.

- தொடரும்...

இதையும் படிங்க:Exclusive:திருச்செந்தூர் நெரிசல்- நீதிமன்ற உத்தரவால் முருக பக்தர்களுக்கு நிம்மதியா?

Last Updated : Apr 13, 2022, 7:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details