ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
இந்த குறளுக்கான விளக்கம், அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும் என்பதாகும்.
கரோனாவால் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்த மக்கள் மெதுவாக தங்களை சகஜ வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். கரோனா ஊரடங்கில் வேலையில்லாமல் தவித்து வந்த பொதுமக்களுக்கு சேமிப்புதான் கை கொடுத்தது. ஆகவே, சேமிப்பின் முக்கியத்தும் குறித்த தாக்கத்தை ஏற்படுத்தியது ஊரடங்கு. வங்கி, அஞ்சலகம், ஏனைய பிற தனியார் சீட்டு கம்பெனிகளில் மக்கள் தங்களது சேமிப்பை செலுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தபால் முகவரும், முன்னோடி தபால் சிறுசேமிப்பு வாடிக்கையாளருமான கல்யாண சுந்தரம் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "இந்தியாவில் சிறுசேமிப்பு துறையில் அஞ்சலகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வங்கிகளை போலவே அஞ்சலகத்தில் மாதாந்திர வைப்புத் தொகை திட்டம், நீண்ட கால வைப்புத் தொகை திட்டம், மூத்த குடிமக்களுக்கான பென்சன், வைப்புத் திட்டம், பி.பி.எஃப் அக்கவுண்ட், செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வங்கிகளை காட்டிலும் அஞ்சலகத்தில் வட்டி விகிதம் அதிகம். இதுவே அதிகப்படியான வாடிக்கையாளர்கள் அஞ்சலகங்கள் நோக்கி வருவதற்கு காரணம். தற்பொழுது தபால் துறையில் எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறை மூலம் நமது சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தினை பெற்றுக்கொள்ள முடியும். நமது சேமிப்பு கணக்கிலிருந்து பணம் பெறுவதற்கு குறிப்பிட்ட தபால் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாட்டின் எந்த மூலையில் இருந்தும் தபால் நிலையங்கள் மூலமாக நாம் பணத்தினை பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக கிராமங்களிலும் தபால் நிலைய நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. எனவே, கிராமப்புற மக்களும் குறுகிய நேரத்தில் விரைவான சேவையை பெற முடிகிறது.
தபால் நிலைய சிறு சேமிப்பு கணக்குகளில் செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு அதிகபட்சமாக 7.6 விழுக்காடு வட்டி வழங்கப்படுகிறது. இதுதவிர மூத்தக்குடி மக்களுக்காக மூன்று மாதத்திற்கு ஒரு முறை வட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுதவிர ஓய்வூதியதாரர்கள், நடக்க முடியாதோர் தங்களின் வீட்டில் இருந்தவாறே வாழ்நாள் உயிர்ப்பு சான்றிதழ்களை புதுப்பித்துக் கொள்ளலாம். தபால் நிலையங்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சிறு சேமிப்பு கணக்குகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பிபிஎப் கணக்கில் செலுத்தப்படும் தொகை நேரடியாக அரசாங்கத்தால் கையாளப்படுகிறது. செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு அடுத்தப்படியாக அதிகபட்சமாக இந்த சேமிப்பு கணக்குக்குத்தான் வட்டி அதிகம் வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 7.1 விழுக்காடு வட்டி நாம் செலுத்தி இருக்கும் தொகைக்கு ஏற்ப வழங்கப்படும்.
இந்த கணக்கை பொறுத்தவரையில் வருடத்திற்கு குறைந்தபட்சம் 1000 முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை செலுத்திக் கொள்ளலாம். ஒருவேளை வருடத்தில் குறைந்தபட்ச அளவு கூட நம்மால் பிபிஎப் கணக்கில் பணம் செலுத்த முடியவில்லை எனில், அடுத்து வரும் ஆண்டில் குறைந்தபட்ச அபராத கட்டணத்தோடு பணம் செலுத்தி கொள்ளலாம். இதில் குழந்தைகள் முதல் முதியோர் வரை யார் வேண்டுமானாலும் கணக்கு வைத்துக் கொள்ளலாம். மேலும், இந்த சேமிப்புக் கணக்குகள் வாடிக்கையாளர் விருப்பத்தின் பேரில் காலநீட்டிப்பும் செய்துக் கொள்ளலாம். கூடுதல் அம்சமாக இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணத்திற்கு வருமான வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது.
இந்த கணக்கின் மூலம் பெறப்படும் பணத்தையோ அல்லது இந்த சேமிப்பு கணக்கையோ நீதிமன்றத்தால் கூட முடக்க முடியாது. இந்த சேமிப்பு கணக்கு அஞ்சலகங்கள் மட்டுமல்லாமல் வங்கிகளிலும் உள்ளன. வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் இருப்புத் தொகை வைக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஆனால், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரின் கணக்குகளில் ரூ.500 மட்டும் இருப்புத் தொகையாக வைத்தால் போதுமானது. வங்கி போன்ற பிற இடங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களும் அஞ்சலக கணக்கிற்கு மாற்றம் செய்து வருகின்றனர்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளீர்களா? - 'இன்னும் இரண்டு நாட்கள் மட்டும்தான்...'