சாதிய அடையாளங்களை அழித்த கிராம மக்கள் தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட புளியம்பட்டி அருகே உள்ள சவலாப்பேரியில் கடந்த 09ம் தேதியன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் அனைத்து சமுதாய மக்களை ஒன்றினைக்கும் வகையில் அனைத்து சமுதாயத்தினரையும் கூட்டி சமூக நல்லிணக்கம் மற்றும் மாற்றத்தை தேடி கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியம்பட்டி, அக்காநாயக்கன்பட்டி, ஒட்டுடன்பட்டி, பூவாணி, சவலாப்பேரி, ஆலந்தா, சிங்கத்தாகுறிச்சி, காசிலிங்காபுரம், கொடியன்குளம், நாரைக்கிணறு, மருதன்வாழ்வு மற்றும் கொல்லங்கிணறு கிராமங்களைச் சேர்ந்த அனைத்து சமுதாய பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:இளைஞரை வெட்டிக் கொன்று ஆற்றில் வீச்சு.. தந்தை, மகள் உள்பட 8 பேர் கைது - தஞ்சாவூரில் நடந்தது என்ன?
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வன்முறையை தடுப்பது சம்மந்தமாகவும், சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்தவது தொடர்பாகவும் அனைத்து கிராமங்களிலும் அனைத்து சமூக மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கூறினார்.
மேலும், கிராமங்களில் அனைத்து சமூக மக்களும் பயன்படுத்தும் பொது இடங்களிலும் கல்வி நிலையங்களிலும் வன்முறையை தூண்டக்கூடிய சாதிய அடையாளங்களை அறவே நீக்கி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றும் அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். இது குறித்தான செய்தியை கூட ஈடிவி பாரத் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில், சமூக நல்லிணக்க கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விழிப்புணர்வு ஏற்படுத்தியதின் பயனாக நேற்று (ஆக 15), சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆலந்தா கிராமம், சிங்கத்தாகுறிச்சி கிராமம், காசிலிங்காபுரம் கிராமம் ஆகிய கிராமங்களிலுள்ள ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கிராமத்தில் பொது இடங்களில் உள்ள சாதிய அடையாளங்களை அழிப்பதாக கூறி தங்கள் கிராமத்திலுள்ள மின் கம்பங்கள், நெடுஞ்சாலைத்துறை அடையாளப் பலகை (Sign Boards), மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி, அடிகுழாய், இமின்வாரிய டிரான்ஸ்பார்மர்கள், தரைப்பாலங்கள், குடிநீர் மோட்டார் மற்றும் பேரூந்து நிறுத்தம் என 101 இடங்களிலிருந்த ஜாதிய அடையாளங்களை அழித்துள்ளனர்.
இதனையடுத்து அனைத்து மக்களும் இனிவரும் காலங்களில் சாதிய வேறுபாடுகள் இல்லாமல் ஊருக்குள் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் செயல்பட்டு, எவ்வித பிரச்சனையும் இல்லாமல் அமைதியான மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை மாற்ற வேண்டும் என்றார். மேலும், சாதிய அடையாளங்களை தாமாக முன்வந்து அழித்த கிராம மக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மனநலன் பாதித்தவரின் கைகளை கட்டி காலை முறித்த சம்பவம்... சாட்சியின் கையும் உடைப்பு.. போலீசார் விசாரணை!