தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, கயத்தார், எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய தாலுகாக்களில் சுமார் 1,70,000 ஹெக்டேர் பரப்பளவிலான மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் உளுந்து, கம்பு, பாசி, வரகு, கேழ்வரகு, மக்காச்சோளம், பருத்தி மற்றும் மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. ஆனால் இந்த ஆண்டு சரியாக மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனால் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட செக்காரக்குடி கிராமத்தில், கொடும்பாவியை தெருத்தெருவாக இழுத்து செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தும், ஒப்பாரி பாடல் பாடியும் கொடும்பாவியை எரித்தனர்.
இந்த சடங்கின் மூலம் மழை பெய்யும் எனவும், விவசாயம் செழிக்கும் எனவும் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செக்காரக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ராமலெட்சுமி கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இறவை பாசன விவசாயத்தைவிட மானாவாரி விவசாயமே அதிக பரப்பளவில் நடக்கிறது. சிறுதானியங்கள், பருத்தி, மிளகாய்தான் இங்கு பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. சித்திரை மாதமே கோடை உழவு ஒட்டி மழைக்காகக் காத்திருந்தோம். ஆவணி மாதத்தில் ஒரு மழையும், புரட்டாசியில் ஒரு மழையும் மட்டுமே பெய்தது. ஆவணியில் பெய்த மழையை நம்பி சில பகுதிகளில் விதைத்தோம்.