சாலை சீரமைத்து தராததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்! - சாலை சரி செய்து தர போராட்டம்
திருவாரூர்: நன்னிலம் அருகே திருமியச்சூர் ஊராட்சியில் இரண்டு வருடமாக சாலை சீரமைத்து தராததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருமியச்சூர் ஊராட்சியில் சுமார் 500- குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், சாலை மோசமான நிலையில் குண்டும் குழியுமாக இருப்பதால் 2018 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாடைகட்டி ஊர்வலம் நடத்த போவதாக அறிவித்திருந்த நிலையில் நன்னிலம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை பின் பாடைகட்டி ஊர்வலம் நிறுத்தி வைத்தனர்.
இதனையடுத்து நன்னிலம் ஒன்றிய அலுவலகத்தில் 2019ஆம் ஆண்டு முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக சிபிஎம் சார்பில் அறிவித்தனர். இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தைக்கு பின்பு 30 நாள்களில் சரி செய்வதாக மீண்டும் கூறினார்.
இந்நிலையில், கடந்த இரண்டு வருடமாக இந்தச் சாலையை சரிசெய்யாத காரணத்தினால் நேற்று (அக்.9) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கிராம மக்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை -திருவாரூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்பு தகவலறிந்து நன்னிலம் வட்டாட்சியர் மணிவண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகுமரன் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு வந்து விரைவில் சாலை சீரமைக்கும் பணியை ஆரம்பித்து விடுவோம் என வாக்குறுதி கொடுத்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.