தூத்துக்குடி:மாவட்ட பத்திரப்பதிவு அலுவலக மேலாளராகப் பணியாற்றிவருபவர் குருசாமி. இவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும், பத்திரப்பதிவுகளுக்கு கையூட்டுப் பெறுவதாகவும் அடுக்கடுக்கான பல புகார்கள் எழுந்தன.
இந்தப் புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத் துறையினர், தூத்துக்குடி கே.டி.சி. நகர் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள அவரது வீட்டில் நேற்று (ஜூலை 29) காலை அதிரடி சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவினர், காலை 6.30 மணிமுதல் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
பத்திரப்பதிவு மேலாளர் வீட்டில் சோதனை குருசாமியின் வங்கிக் கணக்கு, அவரது மனைவி, குடும்பத்தினர் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகள், சொத்துப் பத்திரங்கள், பணப்பரிமாற்றங்கள் குறித்த ஆவணம் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.
இரவு 9 மணி வரை நீடித்த சோதனையில் கணக்கில் வராத 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குருசாமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் சந்தை மதிப்பு கணக்கிடும் பணி நடைபெற்றுவருகிறது. இதைத்தொடர்ந்து அவர் பணிசெய்யும் பத்திரப்பதிவு அலுவலகத்தின் அறையில் இன்று (ஜூலை 30) சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே வருமானத்துக்கு அதிகமாக 80 லட்சம் ரூபாய் வரை குருசாமி சொத்து சேர்த்ததாக அவர் மீதான வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பத்திரப்பதிவு மேலாளர் வீட்டில் இரவு வரை நீடித்த இந்தச் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பத்திரப்பதிவு மேலாளர் வீட்டில் சோதனை