தூத்துக்குடி: கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று (டிசம்பர் 23) தூத்துக்குடிக்கு விமானம் மூலம் தொல். திருமாவளவன் எம்பி வந்தடைந்தார்.
அதன்பிறகு விமான நிலையத்தில் செய்தியாளரைச் சந்தித்த அவர், "மத்திய அரசு நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தி சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. அரசியலமைப்பின் மதச் சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிரானது.
ஏனெனில் 21 வயதுக்குட்பட்டு சாதி, மத மறுப்புத் திருமணம் நடைபெறுகையில் சம்பந்தப்பட்டவர்களை போக்சோ வழக்கில் கைதுசெய்ய இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. எனவே இந்தத் திருத்தச் சட்டத்தினை சாதி, மத மறுப்பு, திருமணத்தை எதிர்ப்பவர்களே ஆதரிக்கின்றனர்.
மேலும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் தேர்தல் திருத்தச் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது. வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை இணைப்பதன் மூலம் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது தனக்கு வாக்களிக்காதவர்களை, வாக்களிக்காத சமூகத்தினரின் கணிசமான வாக்குகளை அதிகாரத்தைப் பயன்படுத்திச் செல்லாதவையாக மாற்ற முடியும். எனவே இந்தத் திருத்தச் சட்டங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.