தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 27, 2021, 10:10 AM IST

ETV Bharat / state

'சசிகலா விடுதலையால் அதிமுகவில் மாற்றம் ஏற்படலாம்' - ரவிக்குமார் எம்.பி.,

தூத்துக்குடி: சசிகலா விடுதலையால் தேர்தலுக்கு பின் அதிமுகவில் மாற்றம் ஏற்படலாம் என விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகியுமான ரவிக்குமார் இன்று(ஜன.27) கோவில்பட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது; டெல்லியில் நேற்று(ஜன.27) டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கண்ணீர்புகை தாக்குதல் நடத்தியும், தடியடி நடத்தியும் வன்முறையை ஏவிய மத்திய அரசின் இந்த அதிகாரத்துவ போக்கை வன்மையாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம்.

இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வருகிறது. இன்னும் அங்கே லட்சக்கணக்கான விவசாயிகள் கூடியிருக்கிறார்கள். குடியரசு நாளில் குடிமக்கள் மீது இப்படி வன்முறையை காட்டுவது கண்டிக்கத்தக்கது. இனிமேலும் தாமதிக்காமல் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மூன்று வேளாண் விரோத சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமரை கேட்டுக்கொள்கிறோம். அதுபோல விவசாயிகள் மீது மேலும் எந்த ஒரு தாக்குதலையும் நடத்தக் கூடாது என்று உள்துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.

பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டு தங்களுடைய வாக்கு வங்கியை எவ்வளவு என்று காட்டியிருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி, தான் பங்கேற்கும் அணியின் வெற்றியை சாதித்து தன்னுடைய செல்வாக்கு என்ன என்பதை காட்டியிருக்கிறது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அதிமுகவில் இருந்தார்கள். திமுகவுடன் காங்கிரசும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் மட்டும்தான் இருந்தன. ஆனால் பெரும்பாலான இடங்களில் திமுக அணி வென்றது.

அதுபோலவே 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் ஒரு மகத்தான வெற்றியை திமுக தலைமையிலான அணி பெற்று இருக்கிறது. அதிலும் குறிப்பாக வட மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் ஒவ்வொரு வேட்பாளரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் செல்வாக்கால் உயர்ந்தது என்பதை அரசியல் பார்வையாளர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

பாமகவை விட செல்வாக்குமிக்க கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிறது. வெற்றி தோல்வியை சின்னங்கள் மட்டுமே தீர்மானிப்பதில்லை. அதிமுகவின் சொந்த சின்னத்தில் நின்ற வேட்பாளர்களில் ஒருவர் தவிர எல்லோருமே தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகிறார். அவர்கள் இப்போது கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

அவர் விடுதலையாகி வந்ததும் உடனடியாக தமிழ்நாடு அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது. தேர்தலுக்கு பிறகு வேண்டுமானால் அதிமுகவின் போக்கிலே சசிகலாவினுடைய பங்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். தேர்தலுக்கு முன்பு அவருடைய வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை.

ஏற்கனவே நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அணியில் இடம் பெற்றிருக்கிறோம். அந்த அணி தொடரும் என்று எங்கள் தலைவரும் சொல்லியிருக்கிறார். திமுக தலைவர் கூட ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதே கூட்டணி தொடர்கிறது என்று உறுதிப்படுத்தி இருக்கிறார் எனக் கூறினார்.

இதையும் படிங்க: அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் - உதயநிதி ஆதரவு

ABOUT THE AUTHOR

...view details