'மாநில கட்சிகளை அழித்துவிட பாஜக முயற்சி' தூத்துக்குடி: வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சமநீதி போராளி இ.வெங்கடேசன் 29 ஆவது நினைவேந்தல் மற்றும் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவி வழங்கும் விழா கோவில்பட்டி அருகே கிழவிப்பட்டி கிராமத்தில் சமூக சேவை அறக்கட்டளை திடலில் நேற்று (டிச. 28) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக விசிக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டு சமநீதி போராளி இ.வெங்கடேசன் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பின்னர் கூட்டத்தில் விசிக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு பேசுகையில், சாதி ஒழிப்பை முன்னெடுத்து செல்வதுதான் விடுதலை சிறுத்தைகள் இயக்கம். ஆனால் சாதியை வளர்ப்பதற்கு தான் பாஜக, ஆர்எஸ்எஸ், சங்கப் பரிவார் போன்ற அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. இதற்கு இறையாக இன்றைக்கு அதிமுகவை கூறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணாவின் பெயரில் எம்ஜிஆர் இந்த கட்சியை எதற்கு தொடங்கினாரோ அந்தக் கனவை சிதைத்துக் கொண்டிருக்கிறது என்றார்.
இந்தியாவில் இருக்கும் மாநில கட்சிகள் எல்லாம் அழித்துவிட்டு அதில் பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கால் பதிக்க முயற்சி செய்கின்றன. அதே வேலையைத்தான் தமிழ்நாட்டில் செய்கிறது. இதை முறியடிக்கின்ற சக்தியாக திமுக உள்ளது. இதற்காகத்தான் திமுகவோடு விடுதலை சிறுத்தைகள் கட்சி சேர்ந்து பயணிக்கிறது. இன்றைக்கு இந்த கூட்டணி வலிமையாக இருக்கின்றது. பலர் பிரித்தாலும் சூழ்ச்சியை முயற்சிக்கின்றனர். இதற்காகத்தான் தமிழ்நாட்டில் கலவரத்தை பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் உருவாக்கி வருகிறது என கூறினார்.
இதற்கு ஒரு தலைவர் இருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை, இவர் பேசுவதெல்லாம் பொய், போகிற போக்கில் உலறுகின்ற வேலையை செய்கிறார். இன்றைக்கு சாதி ரிதியாக பிரிந்து கிடப்பது தான் பாஜகவின் இருப்பு இருக்கின்றது. சாதி வாரியாக பிரிப்பதன் நோக்கம் ஆர்எஸ்எஸின் வெற்றி இருக்கிறது. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் வருகின்ற தேர்தலில் பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் அமைப்புகளை விரட்டியடிக்கின்ற தேவை இருக்கிறது என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு உதவுங்கள்.. ஆனந்த் மகேந்திராவுக்கு நூதன முறையில் கோரிக்கை வைத்த ஓவியர்!