தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெற்று வரும் மாற்றுத்திறனாளி ஒருவர் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு தரப்பில் மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,500 ஊக்கத்தொகையை பெறுவதற்காக முதலமைச்சர் தனிப் பிரிவிற்கு மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், தான் ஒரு மாற்றுதிறனாளி என்றும், ஜவுளிக் கடையில் பணியாற்றியதாகவும் வயது முதிர்வு காரணமாக தற்போது ஓய்வில் இருப்பதாகவும் கூறியுள்ளார். எனவே, தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிக்கு வழங்கும் ரூ.1500 உதவித்தொகையை தனக்கு வழங்கி உதவ ஆவண செய்யவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, கள விசாரணைக்காக தூத்துக்குடி பகுதி-1 கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா என்பவரிடம் வந்துள்ளது. இந்த விண்ணப்பித்தில் உள்ள தகவல்கள் படி, மனுதாரார் வசிக்கும் பகுதியில் இவர் மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெற தகுதியானவரா என்று பிரேமலதா விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதில் மாற்றுத்திறனாளிகள் மாத உதவித்தொகைக்கு முதலமைச்சர் தனிபிரிவிற்கு மனு அளித்தவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும் அவரது மனைவி ஓய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் என்பதும் தெரியவந்தது.