1911ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதியை இந்தியர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கொடைக்கானலில் படிக்கும் தன்னுடைய பிள்ளைகளைப் பார்ப்பதற்காக போட் மெயில் ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில், மனைவி மேரியுடன் அமர்ந்திருக்கிறார் அன்றைய திருநெல்வேலி கலெக்டர் ஆஷ். கலெக்டரின் காவலாளி நீர் பிடிக்கச் சென்றிருந்த சமயத்தில், முதல் வகுப்புப் பெட்டியில் ஏறிய பயணி ஒருவர், ஆஷை அவரது மனைவியின் கண்முன்னே மூன்று முறை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் தப்பித்து ஓடிய அந்நபர் ரயில் நிலையத்தில் உள்ள கழிவறை ஒன்றில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துவிடுகிறார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தீவிரவாதப் போக்கின் புரட்சிக்குப் பலியான முதல் ஆங்கிலேயர் கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கோர்ட் ஆஷ். அதைச் செய்து முடித்தவர் இருபத்து ஐந்து வயதே நிரம்பிய வாஞ்சிநாதன்.
போராட்டக்காரர்களின் கணக்கு
இந்தியாவில் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், உலகில் வாழ்ந்த ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஜனத்தொகையை விட இந்திய சுதந்திரத்திற்காகப் போராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். போராட்டக்காரர்களுக்கு ஒரு கணக்கு இருந்தது. இந்தியாவை அடிமைப்படுத்தியிருக்கும் ஆங்கிலேயர்களை ஒரு இந்தியன் சுட்டுக் கொன்றால் போதும்; இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்.
அந்த அடிப்படையில்தான், அப்போது திருநெல்வேலி கலெக்டராக இருந்துகொண்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தை நசுக்குவதில் தீவிரமாக இருந்த, நெல்லை எழுச்சியின்போது கொடுமையாக நடந்துகொண்டு வ.உ.சி.யின் கப்பல் கம்பெனியை அழிந்துபோகச் செய்த கலெக்டர் ஆஷ் என்பவரைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுத்தனர்.
வாஞ்சிநாதன் தேர்ந்தெடுத்தப் பாதை
செங்கோட்டையில் பிறந்த வாஞ்சிநாதன், பள்ளிப்படிப்பை செங்கோட்டையிலும், கல்லூரிப் படிப்பை திருவனந்தபுரத்திலும் முடித்து, வன இலாக்காவில் பணிபுரிந்தார். அப்போது தீவிரமடைந்துவந்த இந்திய சுதந்திர வேட்கையின்பால் ஈர்க்கப்பட்ட வாஞ்சிநாதன், தனது போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்தது ஆயுத தாரிகளின் பாதை. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் பங்குகொள்ள, அன்றைய பிரெஞ்சு காலனியான பாண்டிச்சேரியில் செயல்பட்டுவந்த சாவர்க்காரின் அபிநவ் பாரத் அமைப்பின் கிளை அமைப்பான வி.வி.எஸ். ஐயரின் பாரத மாதா அமைப்பின் மூலம் ஆயுதப் பயிற்சி பெற்றார்.
ஆஷின் அடக்குமுறை
பாளையக்காரர்கள் காலத்திலிருந்தே விடுதலைக் குரலை ஒங்கி ஒலிக்கச் செய்திருந்தது அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி. தூத்துக்குடி தாலுகாவின் துணை கலெக்டராக இருந்து, பதவி உயர்வு பெற்றிருந்த ஆஷ், திருநெல்வேலியின் விடுதலைக் குரலை அடக்குவதில் தீவிரம் காட்டினார். அதில் ஒன்று வ.உ.சி.யின் சுதேசி கப்பல் நிறுவனத்தை நிர்மூலமாக்கி, வ.உ.சி., சுப்பிரமணிய சிவா தண்டனை பெற காரணமாய் இருந்தது. இதனால் வெகுண்டெழுந்த வாஞ்சிநாதன், ஆஷைக் கொன்றார்.