தூத்துக்குடி:விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஒரே குடும்பத்தினரைச் சேர்ந்தவர்கள், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய இன்று (அக்.01) அதிகாலை கிளம்பி சொகுசு வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை சிவகாசி வடக்குத்தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் செல்வக்குமார் (32) ஓட்டி வந்துள்ளார்.
அப்போது, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி - எட்டயபுரம் நெடுஞ்சாலையில் வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது, வேகத்தடை இருப்பதை அறியாமல் வேகமாக வந்த வேன் தூக்கி வீசப்பட்டு ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி, சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதில் துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (58) என்ற பெண் சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு உயிரிழந்தார். மேலும், பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்த தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ், கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்யா மற்றும் காவலர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்த 3 நபர்களை மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பஞ்சவர்ணத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சாலையின் நடுவே கவிழ்ந்த வேனை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:இந்த ரெட் பட்டனா! இணையத்தை வட்டமடிக்கும் ரஜினியின் க்யூட் செல்பி வீடியோ!