தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுலாத்தலமாகும் தூத்துக்குடி வல்லநாடு வெளிமான் சரணாலயம்...!

சுற்றுலா மையமாக மாறவுள்ள தூத்துக்குடி வல்லநாடு வெளிமான் சரணாலயம் குறித்த சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.

சுற்றுலாத்தலமாகும் தூத்துக்குடி வல்லநாடு வெளிமான் சரணாலயம்
சுற்றுலாத்தலமாகும் தூத்துக்குடி வல்லநாடு வெளிமான் சரணாலயம்

By

Published : Oct 21, 2022, 8:05 PM IST

Updated : Oct 23, 2022, 3:34 PM IST

தூத்துக்குடி:ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில், திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வல்லநாடு வெளிமான் சரணாலயம். 1641.21 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம், கடந்த 1987்ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட்ட சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் தென்கோடியில், வெளிமான்களுக்கு(Blackbuck) என பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட சரணாலயம் இது. மேலும் இது, தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே வனவிலங்கு சரணாலயம் ஆகும்.

இங்கு, வெளிமான்களை தவிர புள்ளி மான்கள், மிளா, குள்ளநரி, காட்டுப்பன்றி, காட்டுப்பூனை, முயல்கள், கீரி, பாம்பினங்கள், தேள் வகைகள் காணப்படுகின்றன. மேலும், மயில், குயில், கழுகு, பருந்து, மரகத புறா, நாரை, மரங்கொத்தி போன்ற பல பறவையினங்களும் வாழ்ந்து வருகின்றன.

வெளிமான்களின் எண்ணிக்கை:19ஆம் நூற்றாண்டு வரை வெளிமான்கள் இந்தியாவில் அதிகளவில் இருந்தன. ஆனால், தற்போது அவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் கோடியக்கரை, சத்தியமங்கலம், நாகப்பட்டினம் மற்றும் வல்லநாடு ஆகிய 4 இடங்களில் மட்டுமே வெளிமான்கள் உள்ளன.

வல்லநாடு சரணாலய பகுதியில், ஒரு காலத்தில் மான்களைப் பார்ப்பதே அரிது என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது காலை, மாலை வேளைகளில் ஆண், பெண், குட்டிகள் எனக் கூட்டம் கூட்டமாக அருகில் உள்ள சமவெளிப் பகுதிகளில் மேய்வதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இதுவே மான்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதற்குச் சான்று.

வெளிமான்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்திருப்பது வனத்துறையினரை மட்டுமல்லாது, இயற்கை ஆர்வலர்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

சுற்றுலாத்தலமாகும் தூத்துக்குடி வல்லநாடு வெளிமான் சரணாலயம்

சுற்றுலாத்தலமானசரணாலயம்:வல்லநாடு வெளிமான் சரணாலயத்தை, மாணவர்கள் அவ்வப்போது வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். மலையேறும் பயிற்சிக்காக 6 கி.மீ. தொலைவுக்கு டிராக் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இங்கு வந்து மலையேறும் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

சரணாலயத்துக்குள் மாணவர்கள், பொதுமக்களைக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அனுமதித்து மான்களைப் பார்வையிட வசதி செய்யும் வகையில், சுற்றுலா மையமாக மாற்றும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

மேலும், இந்த சரணாலயத்தில் அனுமதி பெற்று முத்து நகர் இயற்கை நல அறக்கட்டளை சார்பாகப் பள்ளி, மாணவ, மாணவிகளை ஒரு நாள் பயணமாகக் கூட்டிச் சென்று பார்வையிட வைத்துள்ளனர். மாணவியர்கள் மகிழ்ச்சியுடனும், ஒரு எதிர்பார்ப்புடனும் சென்று ரசித்து மகிழ்ந்ததாகக் கூறினர்.

மக்கள் ஒத்துழைப்பு வேண்டும்: இது குறித்து வனச்சரக அலுவலர் பிருந்தா கூறுகையில்,“இந்த சரணாலயத்தில், மான்களுக்குத் தேவையான குடிநீர் வசதிக்கு 4 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணறு அமைத்து ஆயில் என்ஜின் உதவியுடன் தொட்டிகளில் எப்போதும் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது.

சரணாலயம் முழுவதையும் கண்காணிக்க 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, அங்கு வனக்காவலர்கள் 24 மணி நேரமும் ஷிப்ட் அடிப்படையில் பணியில் உள்ளனர். சரணாலயத்தில் 2 இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு மான்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

வெளிமான்கள் மிகவும் சென்சிட்டிவ் ஆன விலங்கு. சிறு அசைவு கூட அதனைத் தொந்தரவு செய்யும். எனவே, அவைகளைத் தொந்தரவு செய்யாமல் சுதந்திரமாக நடமாட விட்டாலே போதும், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மான்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:கல்லூரி மாணவிகளின் சூப்பர் ஹீரோ “போலீஸ் அக்கா” திட்டம் செயல்படுவது எப்படி?

Last Updated : Oct 23, 2022, 3:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details