தூத்துக்குடி:கடைகளில் வடை, பஜ்ஜி போன்ற உணவுப்பொருட்களை அச்சிட்ட பேப்பர்களில் வைத்து வழங்குவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதனை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வெளியிட்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தூத்துக்குடி மாவட்டத்தில் வடைக் கடைகள், தேநீர் கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், இனிப்பகங்கள் உள்ளிட்ட கடைகளில் பஜ்ஜி, போண்டா, முட்டை பப்ஸ், ஸ்வீட்ஸ் மற்றும் இதரப் பொருட்கள் பொதுமக்களுக்கு அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பர் மற்றும் காகிதங்களில் பரிமாறுவதும், பார்சல் கட்டுவதும், தொடர்ந்து நடைபெற்றவண்ணம் உள்ளது.
நியூஸ்பேப்பரில் உண்பதால் கேன்சர் ஏற்பட வாய்ப்பு: வணிகர்களின் இம்மாதிரியான பாதுகாப்பற்ற வணிகப் பழக்கவழக்கங்களை மேற்கொள்வதால் பொதுமக்களின் பொது சுகாதார நலன் பாதிக்கப்படும். அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பரில் விநியோகிக்கப்படும் உணவுப்பொருட்களை உண்ணும் பொதுமக்களுக்கு அப்பேப்பரின் அச்சு மையில் உள்ள காரீயத்தினால், வயிற்றுப்புண் ஏற்பட்டு பின்னாளில் அது கேன்சராக உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன
ஆகவே, தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி போன்ற இதரப்பொருட்கள் அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பரில் வழங்கத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பற்ற மற்றும் தரம் குறைந்த உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு அபராதம் விதிப்பது, வணிகர்களுக்கெதிராக வழக்கு தொடர்வது போன்ற நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்க இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் வணிக நிறுவனங்களைத்தொடர்ந்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும், பொதுமக்களின் பொது சுகாதார நலனைக்கருத்தில் கொண்டு சட்ட நடவடிக்கையும், வணிகர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் விழிப்புணர்வும் ஏற்படுத்த உள்ளோம்.