தூத்துக்குடி:கோவில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டு 38 ஆண்டுகளை கடந்த நிலையில், கல்லூரி ஆண்டு விழா, கல்லூரியிலுள்ள கலையரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி திரவ இயக்க திட்ட மையத்தின் இயக்குநர் வி.நாராயணன் பங்கேற்றார்.
அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது, "சந்திரயான்-3 செயற்கைக்கோள் புரோபெல்சன் மாடல் (உந்துவிசை தொகுதி), விக்ரம் லேண்டர், ரோவர் ஆகிய 3 பாகங்கள் கொண்டது. இது மொத்தம் 3,900 கிலோ எடை கொண்டது. இதில் 6 கருவிகள் உள்ளன. மொத்தம் 4 நாடுகள் நிலவில் தரையிறங்கி உள்ளன. இதில் இந்தியா 4வது நாடு. ஆனால், தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியாதான். இது இஸ்ரோவிற்கும், இந்தியாவிற்கும் மிகப்பெரிய சாதனையாகும்.
இதனால் அனைத்து நாடுகளும் இந்தியாவை வியந்து பார்த்தன. தரையிறங்கிய 3 மணி நேரத்துக்குப் பின்னர், ரோவரில் பொருத்தப்பட்டிருந்த சோலார் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து, தற்போது வரை 100 மீட்டர் வரை பயணம் செய்துள்ளது. இதில், முதல் கண்டுபிடிப்பு நிலவில் உள்ள தரையில் 60 டிகிரி செ.கி. வெப்பம் உள்ளது என்பதுதான். இரண்டாவதாக நிலவில் உள்ள பிளாஸ்மா, அதாவது 300 லட்சம் எலக்ட்ரான் ஒரு மீட்டர் க்யூப் வளைவுக்குள் இருக்கிறது என்றுதான்.
மூன்றாவதாக நிலவின் 6 இடங்களில் அதிர்வு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குரோமியம், சிலிக்கான், சல்பர், டைட்டானியம் உள்ளிட்ட 8 தாதுப் பொருட்கள் இருக்கிறது. ஆகவே, சந்திரயான் - 3 திட்டம் என்பது 100 சதவீதம் வெற்றிகரமான திட்டமாகும். இந்த திட்டம் இந்தியர்களை ஒருமைப்படுத்திய ஒரு திட்டம். 2047-இல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும். அதற்கு இதுதான் முதல் படி. சந்திரயான் -3 திட்டம் இந்தியர்களுக்கு பெருமை சேர்த்த திட்டம்.
கடந்த 2-ம் தேதி லேண்டர் இயந்திரத்தை இயக்கி, 40 மீட்டர் மேலே உயர்த்தி வேறொரு பீடத்தில் வைத்துள்ளது. வருங்காலத்தில் தாது பொருட்களை எடுத்து வருவதற்கு இது பயன்படும். இதுவும் ஒரு வெற்றிகரமான செயலாகும். சுதந்திரத்துக்கு பின்னர் முதல்முறையாக ராக்கெட் 1967-ம் ஆண்டு தான் அனுப்பினோம். இதனால் மற்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட முடியாது. இந்த 60 ஆண்டுகளில் இந்தியா செய்தது உலகமகா சாதனையாகும். இவையனைத்தும் இந்தியா மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு திட்டம்.