தூத்துக்குடி:தமிழகத்தில் ஆழ் கடல் மீன் பிடிப்பை ஊக்குவிப்பதற்காக தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட நான்கு மாவட்டத்தை சார்ந்த 50 மீனவர்களுக்கு தலா 60 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
'சாகர் பரிக்ரமா' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா, மாநிலம் முழுவதும் மீனவ மக்களை சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்தார். பின்னர் தூத்துக்குடியில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த போது, கோயிலில் அவருக்கு பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.
கோயிலில் உள்ள மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை அம்பாள், பெருமாள், விநாயகர், மற்றும் தட்சணாமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் வழிபாடு செய்தார். பின்னர், அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அதில், இணை அமைச்சர் எல்.முருகன் கூறுகையில், "கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு 'சாகர் பரிக்கரமா யாத்திரை' குஜராத்தில் தொடங்கப்பட்ட நிலையில், மஹாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா சுற்றி மேற்கு வங்காளத்தில் முடிவடைய உள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசு கடந்த 9 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்காக 38 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மீனவர்களின் முன்னேற்றத்திற்காக 7 ஆயிரத்து 500 கோடியும், 'ஆத்ம நிர்பர் பாரத் அபியான்' திட்டத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசு மேற்கொண்ட மீனவர் நலத்திட்டத்தின் காரணமாக, கடந்த 9 வருடங்களில் மீன் உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்தை பெற்றுள்ளது.