தூத்துக்குடி:பாஜக சிறுபான்மை அணியின் மாநில அளவிலான மூன்று நாள் பயிற்சி முகாம், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் தொடங்கியது. இதில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் ஜான் பர்லா கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடக்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பர்லா, “இன்று மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் சிறுபான்மையினரும் அதிக அளவில் பயன் பெற்று வருகின்றனர்.
சிறுபான்மையினருக்கான கல்வி திட்டங்களில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் பங்கெடுத்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் கல்வி ரீதியாக முன்னேற்றத்திற்கு பல தடைகள் உள்ளன.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக சிறுபான்மையினர் மேம்படுவதற்கான நடவடிக்கையை திமுக அரசு மேற்கொள்ளவில்லை. திமுக அரசு மத்திய அரசின் மீது உள்ள வெறுப்பின் காரணமாக சிறுபான்மையினருக்கான சமூக கூடங்கள், விளையாட்டு திடல்கள், மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிகள் உள்ளிட்ட பல திட்டங்களுக்காக கிடைக்க வேண்டிய நிதியை பெற்றுத் தர தடையாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி எல்லோருக்குமான வளர்ச்சி, எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற இலக்கோடு பயணித்து வருகிறார். அதன் காரணமாக நாடு இன்று மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. சிறுபான்மை மக்களை வாக்கு வங்கியாக பயன்படுத்தும் திமுகவுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.