தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு திமுக அமைச்சர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்குபெற்று மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டார். தற்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். அவரிடம் அப்பகுதி மக்கள் பல்வேறு குறைகளை முன்வைத்தனர்.
குறிப்பாக சாலை வசதி, போக்குவரத்து, மருத்துவமனை, வேலைவாய்ப்பு, மின்பாதை சீரமைத்தல், குடிநீர் வினியோகம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என புகார்களை அடுக்கினர்.
மேலும் அப்பகுதி பொதுமக்கள், எல்லா தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளுக்கு திமுக தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். ஆனால் தேவேந்திர குல சமுதாய தலைவர் சிலைகளுக்கு திமுக மரியாதை செலுத்துவது இல்லை. மற்ற தலைவர்கள் போல் எங்கள் தலைவர்களுக்கும் திமுகவினர் மரியாதை செலுத்த வேண்டும். அதற்கு நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இதேபோல் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் குறிப்பிட்ட 7 பிரிவினரை தனியே பிரித்து பழங்குடியினர் பட்டியலில் இருந்து வெளியேற்ற சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் திமுக ஆதரவளிக்க வேண்டும் என்றும் ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
ஊராட்சி சபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் மக்கள் தெரிவித்த குறைகளை கேட்ட பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், " இங்கு சொல்லப்பட்ட பெரும்பாலான பிரச்னைகள் உள்ளாட்சி அமைப்பால் தீர்க்கப்பட வேண்டியவை. பஞ்சாயத்து அமைப்பு சரியாக இருந்திருந்தால் இந்த பிரச்னைகள் ஏற்பட்டு இருக்காது. 4 வருடத்துக்கு முன் நடத்த வேண்டிய உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் எங்கே திமுக வென்றுவிடுமோ என்ற அச்சத்தில் தான் தேர்தலை நடத்தாமல் உள்ளது இந்த அரசு. விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது மக்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும்" என்று நம்பிக்கை அளித்தார்.