பத்து ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே என் தலையை சீவி கொள்வேன் - உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி: திமுக இளைஞர் அணி பொதுக் கூட்டமானது, தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சூசை பாண்டியபுரத்தில் சமூக நலம் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவே என்னைப் பற்றி தான் பேசிக் கொண்டு இருக்கிறது. சனாதன ஒழிப்பு மாநாட்டில், எப்படி மலேரியா, டெங்கு, காலரா, கோவிட் போன்ற நோய்களை ஒழித்தோமோ அதேபோல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறினேன்.
இதனால் என்னைக் கைது செய்ய வேண்டும் என்று இந்தியா முழுவதும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இன்றைக்கு ஒரு சாமியார் என்னுடைய தலைக்கு விலை வைத்திருக்கின்றார். உதயநிதி தலையை யார் சீவிட்டு வருகிறார்களோ அவர்களுக்கு 10 கோடி ரூபாய் என்று அவர் அறிவித்து இருக்கிறார்.
என் தலை மேல் உனக்கு அப்படி என்ன ஆசை? நீ ஒரு சாமியார். உன்னிடம் எப்படி பத்து கோடி ரூபாய் உள்ளது? நீ உண்மையான சாமியாரா? இல்ல டூப்ளிகேட் சாமியாரா? பத்து ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே என் தலைய சீவி விட்டு போயிடுவேன். இதே போல் கலைஞரின் தலையை சீவினால் ஒரு கோடி ரூபாய் தருவேன் என்று ஒரு சாமியார் கூறினார். அதற்கு 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் என் தலையை நானே சீவிக்கொள்ள முடியாது என்று அப்போது கலைஞர் கூறினார்.
அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் வரிசையில் தற்போது ஸ்டாலின் வரை சனாதனத்தை ஒழிக்கும் வரை ஓயப் போவதில்லை. சனாதனம் என்றால் யாரும் கேள்வி கேட்கக்கூடாது, எல்லாமே நிலையானது என்பது தான். நூறு வருடத்திற்கு முன்னர் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, 70 வருடத்திற்கு முன்னால் பெண்கள் மேலாடை அணியக்கூடாது, பெண்கள் படிக்கக்கூடாது என்றனர். இதை எல்லாம் உடைத்தது தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூக நீதி.
இதையெல்லாம் கூறினால் இந்துவுக்கு எதிரான கட்சி என்கின்றனர். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப் போகின்றோம். காலை உணவுத் திட்டம் ஒட்டுமொத்த இந்தியாவும் பாராட்டிக் கொண்டிருக்கின்றது. இத்தனை திட்டங்களிலும் அதிகப்படியாகப் பயன்பெற்றவர்கள் இந்துக்களே" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க:"உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி" - உ.பி., ஆச்சார்யா அறிவிப்பு.. கொந்தளிக்கும் திமுக..!