தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகில் உள்ள உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தவர், சுடலை மாடன். இந்த நிலையில் இவரை பேரூராட்சித் தலைவரின் மாமியாரும், முன்னாள் பேரூராட்சித் தலைவருமான ஆயிஷா கல்லாசி என்பவர், சாதிப் பெயரைப் பயன்படுத்தி மிகவும் இழிவாக திட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து தூய்மைப் பணியாளர் சுடலை மாடன், கடந்த மார்ச் 14ஆம் தேதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுடலை மாடன் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று (மார்ச் 23) அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடன்குடி பேரூராட்சியின் கீழ் பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளர் சுடலை மாடனை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய பேரூராட்சித் தலைவரின் மாமியார் ஆயிஷா கல்லாசி மற்றும் செயல் அலுவலர் பாபு மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி திருச்செந்தூர், உடன்குடி, நாசரேத் மற்றும் ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பேரூராட்சித் தலைவரின் மாமியார் ஆயிஷா கல்லாசி மற்றும் செயல் அலுவலர் பாபு ஆகிய இருவரையும் கைது செய்யக் கோரியும், பேரூராட்சித் தலைவர் ஹீமைரா ரமீஷ் பாத்திமா மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உயிரிழந்த சுடலை மாடனின் உறவினர்கள் ஆகியோர், உடன்குடி பேரூராட்சி அலுவலகம் அருகில் சுடலை மாடனின் உடலை வாங்க மறுத்தது மட்டுமல்லாமல், கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்துகின்றனர்.