தூத்துக்குடி:தூத்துக்குடி தமிழ்ச்சாலை தென்பாகம் காவல் நிலையம் எதிரே பிரபல நகைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் மாலை சுமார் 6 மணி அளவில் அரசு அலுவலர்கள் போல் டிப் டாப்பாக ஆடை அணிந்து வந்த 2 பெண்கள், கடைக்குள் சென்று நகைகளைப் பார்த்தனர். பின்னர் சுமார் 10 சவரன் நகை வரை தேர்வு செய்து அங்கிருந்த ஊழியர்களிடம் 'உங்களது கடை முதலாளி எங்கே இருக்கிறார்; அவரை வரச் சொல்லுங்கள்' என்று கேட்டுள்ளனர்.
அதற்கு ஊழியர், ’என்ன காரணம்... எங்களிடம் சொல்லுங்கள்’ என்று கேட்கவே உடனடியாக அருகில் இருந்த மேனேஜர், "மேடம் என்ன விவரம் எங்களிடம் சொல்லுங்கள்" என்று கேட்டுள்ளார்.
உடனே அந்த 2 பெண்களும் நாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் என்று கூறி, தங்களிடமிருந்த ஐடி கார்டை காட்டியுள்ளார்கள். மேலும் கடை ஊழியர்களை மிரட்டி, 'நாங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு மீதி நகையை இலவசமாகத் தர வேண்டும்' என்று மிரட்டி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள் அவர்கள் இருவரையும் அமர வைத்து கூல்டிரிங்ஸ் கொடுத்துள்ளனர்.
பின்னர் மத்திய பாகம் காவல் நிலையத்திற்குப்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தலைமையிலான போலீசார் அந்த நகை கடைக்கு விரைந்து சென்று 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.