தூத்துக்குடி:திருச்செந்தூர் அருகே உள்ளது காயல்பட்டினம் நகராட்சி. இந்த ஊரில் பெருபான்மையாக முஸ்லிம் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த ஊரை அடுத்து 'கொம்புத்துறை' என்ற மீனவ கிராமம் உள்ளது. இங்கு 200க்கு மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். இவர்கள் கிறிஸ்தவ சமூகமான ரோமன் கத்தோலிக்கர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
முஸ்லிம் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் காயல்பட்டினம் நகராட்சியில் உள்ளடக்கிய கொம்புத்துறை கிராமத்தை, முஸ்லிம் சமூக மக்களால் 'கடையக்குடி' என்று அழைக்கப்படுகிறது. இது தான் இங்கு இருக்கும் பெரிய பிரச்னையே!.. ஊரின் பெயர் 'கடையக்குடியா' அல்லது 'கொம்புத்துறையா'? என வழக்கு போடப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளது.
இப்படி இருக்கும் பட்சத்தில், சமீபத்தில் இரு மீனவ சமூகத்தினர் முஸ்லிம் மதத்துக்கு மாறியது மேலும் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம், அந்தோணி பிராங்கோ என்கிற முகமது பிராங்கோ(29), ஜெபாஸ்டியன் என்கிற ஈசா(32), சலீம் என்கிற வில்பிரட் ஆகியோர் இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர். இதில், சலீம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்.
அப்போது ஒரு சில நெருக்கடி காரணமாக அந்த மீனவ கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம், தற்போது காயல்பட்டினத்தில் வசித்து வருகிறார். ஆனால் சமீபத்தில் முஸ்லிம் மதம் மாறிய இருவருக்கும், அதே எதிர்ப்புக் குரல் பலமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், கொம்புத்துறை மீனவ சங்கத்தினர் கொம்புத்துறை கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க விடாமல் தடுப்பதாகவும் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் கிறிஸ்தவர்களோ இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு ஒரு விடை தெரியாமல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மாட்டோம் என கரையிலே தங்கியுள்ளனர். இதனால் அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்று முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த முகமது நியாமத்துல்லா என்பவரிடம் கேட்டோம்.
அப்போது அவர் நம்மிடையே பகிர்ந்த சில விஷயங்கள், "கடந்த 47 வருடங்களுக்கு முன் கன்னியாகுமரி அருகே உள்ள கடற்கரை கிராமத்தில் இருந்து கடல் தொழிலுக்காக அந்த மக்கள் இங்கு வந்தனர். அவர்களுக்கு இடம் கொடுத்து அப்போது ஆதரவு அளித்தோம். பின்னர், அப்பகுதி மக்கள் தாங்கள் வழிபட ஆலயம் அமைத்தனர். அதற்கும் நாங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றும் சொல்லவில்லை.
பின்னர், 'கடையக்குடி' என்ற ஊர் பெயரை 'கொம்புத்துறை' என்று மாற்றினர். அப்போதும் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இப்போது அவர்கள் மதத்தில் இருந்து இருவர் எங்கள் மதத்திற்கு வந்துள்ளனர். அதனை பொறுக்க இயலாதவர்கள் வேண்டும் மென்றே ஊர் பெயர் பலகையை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த இருவரும், மீன்பிடி தொழிலை நம்பியே உள்ளனர்.
மதம் மாறியதால் தொழில் செய்ய விடாமல் முட்டுகட்டை போடுகின்றனர். ஒரு மதத்தில் இருந்து வேறு மதம் மாறுவது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம், மதம் மாறக் கூறி யாரும் கட்டாயப்படுத்துவது இல்லை. ஆனால் இங்கோ மதம் மாறி போனால் எங்கள் ஊரில் இருக்க கூடாது, மீன்பிடி தொழிலுக்கும் வர கூடாது என்று கூறுவது, அதனையும் மீறி இருந்தால் வீட்டிற்கு வரும் குடிநீரை வராமல் தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.