தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் கிராமத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 12 ஆம் வகுப்புகளுக்கான மாதத் தேர்வுகள் இன்று (செப்.2) நடைபெற்றது. அப்போது, வணிகவியல் பிரிவு மாணவர் ஒருவர் தேர்வை பார்த்து எழுதியதாக கூறப்படுகிறது. அப்போது, இது குறித்து வணிகவியல் பிரிவு ஆழிபச்சேரி பகுதியைச் சேர்ந்த சக மாணவர் ஆசிரியர்களிடம் கூறியதாக தெரியவருகிறது.
இதனால், ஆத்திரம் அடைந்த தேர்வை பார்த்து எழுதியதாக கூறப்படும் மாணவர், தேர்வு முடிந்தப் பின்னர் வெளியே வந்த அந்த சக மாணவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இதனை மாணவர் ஒருவர், இரு மாணவர்களையும் சண்டை போட வேண்டாம் எனக் கூறி தடுத்துள்ளார். அப்போது திடீரென கத்தி போன்ற இரும்பை வைத்து, சக மாணவர்களை ஆத்திரத்தில் குத்தியுள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் நடந்ததாக கூறப்படும் நிலையில், காயமடைந்த பள்ளி மாணவர்களை பள்ளி நிர்வாகம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அலட்சியமாக இருந்துள்ளது.
இதையும் படிங்க:சீமானுக்கு எதிரான புகாரில் விஜயலட்சுமியிடம் 2வது நாளாக விசாரணை.. சிரித்த முகத்துடன் சென்றதன் காரணம் என்ன?
இந்நிலையில், காயமடைந்த மாணவரின் தம்பி, பள்ளியில் இருந்து வெளியே சென்று தொலைபேசி மூலமாக தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர்கள் உடனடியாக பள்ளிக்குச் சென்று காயமடைந்த பள்ளி மாணவர்கள் இருவரையும் மீட்டு, ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து, அங்கு மாணவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.