தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜும், அவரது மகனான பென்னிக்ஸும் இணைந்து செல்போன் கடை நடத்திவந்தனர். கடந்த 19ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் ஊரடங்கு முடிந்தபின்னும் கடையை மூடாமல் திறந்துவைத்துள்ளனர்.
இதையடுத்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட சாத்தான்குளம் காவல் துறையினர் ஊரடங்கு நேரம் முடிந்ததால் கடையை அடைக்குமாறு ஜெயராஜிடம் கூறியுள்ளனர். ஆனால், கடையை அடைக்காமல் அவர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் காவல் துறையினர் ஜெயராஜை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த விவரம் குறித்து அறிந்த ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் காவல் நிலையத்துக்குச் சென்று தனது தந்தையை விடுவிக்குமாறு தகராறு செய்துள்ளார். மேலும் அவர் காவலர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அவரையும் கைதுசெய்த காவலர்கள் ஊரடங்கு மீறல், காவலர்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரையும் ஜூன் 21ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இச்சூழலில், ஜூன் 22ஆம் தேதி இரவு நெஞ்சு வலியால் பென்னிக்ஸ் துடித்துள்ளார். அவரை மீட்டு சிறை வார்டன்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.