தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா (65). இவருக்கு சிவாதேவி (42) என்ற மகளும் சிவமாலை (40), சிவவேலன் (37) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். முத்தையா வீட்டின் பின்புறம் புதையல் இருப்பதாக கேரள மாந்ரீகர் ஒருவர் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து சிவமாலை, சிவவேலன் ஆகியோர் தனது நண்பர்களான ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ரகுபதி (47), பன்னம்பாறையைச் சேர்ந்த நிர்மல் கணபதி (18) ஆகியோருடன் சேர்ந்து வீட்டின் பின்புறம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குழிதோண்ட ஆரம்பித்தனர்.
இந்தப் பணி தினமும் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் வழக்கம்போல் சிவமாலை, சிவவேலன், ரகுபதி, நிர்மல் கணபதி ஆகியோர் குழி தோண்டுவதற்காக ஏணி வழியாக குழிக்குள் இறங்கினர்.
மாலையில் திடீரென்று அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் அடுத்தடுத்து 4 பேரும் மயங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே சிவவேலன் மனைவி ரூபா என்பவர் சத்தம் போட்டார். அவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்துவந்து பார்த்து நாசரேத் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.