தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு ஆரோக்கிய மாதா கோவில் தெருவைச்சேர்ந்தவர், குணசேகரன்(56), விவசாயம் மற்றும் ஆயில் மில் நடத்தி வருகிறார். இவரது மனைவி குமரவல்லி வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், குணசேகரன் பெட்ரோல் பங்க் வைப்பதற்காக முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், இணையத்தில் பாரத் பெட்ரோலியம் என்ற பெயர் சம்மந்தமாக தேடும்போது பெட்ரோல் பம்ப் டீலர்ஷிப் பெட்ரோலியம் என்ற பெயரில் ஒரு இணையதளம் இருந்துள்ளது. அந்த இணையதளத்தில் தனது விவரங்களைப் பதிவு செய்துள்ளார்.
பதிவு செய்து சிறிது நாட்களில் பாஸ்கர் என்ற பெயரில் குணசேகரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டுப்பேசியுள்ளனர். அப்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மார்க்கெட்டிங் பிரிவிலிருந்து தாங்கள் பேசுவதாகவும், பெட்ரோல் பங்க் டீலர்ஷிப் பெறுவதற்கு அவரது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள், தகுதிச் சான்று, வங்கி விபரங்கள் உட்பட அனைத்து ஆவணங்களையும் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புமாறு கூறியதால், குணசேகரன் அவற்றை அனுப்பியுள்ளார்.
பின்னர் தங்கள் கணக்கிற்கு ரூ.19,500 செலுத்த வேண்டும் என பாரத் பெட்ரோலியம் என்ற ஒரு வங்கிக்கணக்கை வழங்கி உள்ளனர். அந்த வங்கிக்கணத்தில் குணசேகரன் பணத்தைக் கட்டியுள்ளார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து மீண்டும் குணசேகரனைத்தொடர்புகொண்ட அந்த நபர்கள் டீலர்ஷிப் சான்று பெறுவதற்காக ரூபாய் ரூ.1,10,000 செலுத்துமாறு கூறியுள்ளனர்.
குணசேகரன் அதனையும் கட்டியுள்ளார். மேலும் அதனைத் தொடர்ந்து உரிமம் பெறுவதற்காக ரூ.3,50,000 பணம் கேட்டதால் சந்தேகமடைந்த குணசேகரன் விசாரித்து பார்த்தபோது, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து நேஷனல் சைபர் க்ரைமில் புகார் செய்துள்ளார். குணசேகரன் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து மோசடி செய்தவர்களை தேடிவந்தனர்.