தூத்துக்குடி மாவட்டம், புதியபுத்தூர் அருகேயுள்ள மேல அரசரடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி பூரணம். இந்த தம்பதியருக்கு அருண் சுரேஷ் (12), அருண் வெங்கடேஷ் (12) என இரட்டை ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் பூரணம் தனது மகன்களுடன் அப்பகுதியில் பாட்டியின் பாதுகாப்பில் வசித்து வந்தனர்.
சிறுவர்களின் பாட்டி தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பாட்டிக்கு தினசரி சாப்பாடு கொடுப்பதற்காக சிறுவர்கள் 2 பேரும் வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து செல்வது வழக்கம்.
இதேபோல் நேற்று (நவ. 11) மதியமும் அவர்கள் 2 பேரும் பாட்டிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக சைக்கிளில் வந்துள்ளனர். பின்னர் வீடு திரும்பும் வழியில் அருகில் இருந்த ஊருணிக்கு சென்று குளித்ததாகத் தெரிகிறது.
அப்போது ஆழமான பகுதிக்குச் சென்று குளிக்கையில் நீர் சுழலில் சிக்கி இரட்டையர்கள் இரண்டு பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அக்கம்பக்கத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் சிறுவர்களை காப்பாற்ற முடியாமல் போனது.