தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிக் டாக் இளைஞர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுத்த வனத்துறையினர் - youngsters planting tree tiktok video viral

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே தேரிக்காட்டில் பட்டுப்போன மரத்தை சாய்த்து டிக்டாக்கில் வீடியோ பதிவேற்றம் செய்த இளைஞர்களுக்கு வனத்துறையினர் நூதனமுறையில் தண்டனை வழங்கினர்.

youngster
youngster

By

Published : May 6, 2020, 2:45 PM IST

கரோனா பாதிப்பு காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் ஆகியவை அத்தியவாசியத் தேவைகளாக மாறிவிட்டன. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவதற்கு முன் அன்று நடந்த நிகழ்வுகளை சுடச்சுட தலைப்புச் செய்திபோல் மற்றவர்களுக்கு பகிர வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. இதில், தலைக்கேறிய டிக் டாக் மோகத்தால் ஒரு சிலர், எல்லை மீறி செல்கின்றனர்.

விநோதமான முறையில் ஈடுபடுவதாகக் கூறி அத்துமீறும் காட்சிகள், பார்ப்போரை எரிச்சலூட்டுவதாகவே உள்ளது. பிடித்த பாடலுக்கு நடனம், கலகலவென சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகளைத் தாண்டி, தான்தோன்றித்தனமாக செய்து காவல் துறையிடம் சிக்குவது போன்ற சட்டவிரோத குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. டிக் டாக் காணொலியால் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்றிக்கொண்டவர்களை விட, ஹீரோவாக நினைத்து அல்லல்படுபவர்களே அதிகம். ஒரு லைக்கை பெற, இவர்கள் படும் பாடு சொல்லி மாள முடியாது.

அந்த வகையில், தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் டிக் டாக் மூலம் தனிக்காட்டு ராஜாவாக மாற நினைத்து வனத்துறையினரிடம் பாடம் கற்றுக்கொண்ட ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், தேரிக்காட்டுப்பகுதியில் சுற்றித் திரிந்த மூன்று இளைஞர்கள், மணற்பரப்பில் பட்டுப்போன நிலையில் இருந்த பனை மரத்தை, சாகசம் செய்வது போல் காலால் எட்டி உதைத்து, சாய்ப்பது போன்ற காணொலியை டிக் டாக்கில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

அதில், 'வானம் கொட்டட்டும்' படத்தில் இடம்பெறும் "யாருமில்லா காட்டுக்குள்ள நான்தான் ராஜா" என்ற பாடல் வரிகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், இந்த டிக் டாக் காணொலி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வைரலாகப் பரவியுள்ளது. இந்த வீடியோவைக் கண்ட வனத்துறையினர், வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, பறவைகளின் தங்குமிடமாக இருக்கும் பனைமரத்தை சாய்த்த இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காணொலியில் உள்ள இளைஞர்கள் மூவரும் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், டிக் டாக் மோகத்தால் இவ்வாறு செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இளைஞர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுத்த வனத்துறையினர்

இதனையடுத்து, டிக் டாக் செய்த இளைஞர்களைக் கைது செய்த வனத்துறையினர், பனைமரத்தை சாய்த்த குற்றத்திற்காக மூன்று பேருக்கும் தலா 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

தண்டனைகள் வழங்கியது மட்டுமில்லாமல், இளைஞர்கள் செய்த தவறை உணர்த்தும் விதமாக, பனைமரம் சாய்ந்து கிடந்த இடத்தின் அருகிலேயே முந்திரி மரக்கன்றுகளை நடவு செய்யவைத்தனர்.

தற்போது, வனத்துறையினர் இளைஞர்களுக்கு வழங்கிய இந்த நூதன தண்டனை குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க:நெல்லையில் 11 நாள்களுக்குப் பிறகு மீண்டும் கரோனா - அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details