கன்னியாகுமரி- காஷ்மீர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில், திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47.250 கி.மீ. தொலைவுக்கு ரூ.349.50 கோடியில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 2013-ம் ஆண்டு முடிவடைந்து வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் பயணித்து வருகின்றன.
இந்த சாலை அமைக்கப்பட்ட நாளில் இருந்தே தொடர்ந்து பல்வேறு புகார்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்த சாலையில் வல்லநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. இதுவரை 7 முறை பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி சேதமடைந்த பாலத்தின் ஒரு பகுதி இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அனைத்து வாகனங்களும் ஒருவழிப் பாதையில் சென்று வருகின்றன. இந்த ஒருவழி பாலத்திலும் அவ்வப்போது ஓட்டை விழுவதும், தற்காலிகமாக சரி செய்வதுமாக தொடர்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தோறும் மிகுந்த அச்சத்துடனே இந்த பாலத்தை கடந்து வருகின்றனர்.