கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்டு மாதம் வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அரசு அறிவித்திருந்தது.
அதன்படி ஆகஸ்டு மாதம் 5ஆம் ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஆக. 30) தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவசியமின்றி இருசக்கர வாகனம், கார்களில் வந்தவர்களை அவர் எச்சரித்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசம் வழங்கி அறிவுரை கூறி அனுப்பினார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறியதாக 8,054 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,540 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடந்த இரண்டு மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தனிப்படைகள் அமைத்து ரோந்துப் பணியில் ஈடுபடுத்தி மாவட்டத்தில் 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 30 வழக்கு பதிவுகள் செய்யப்பட்டு 39 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குட்கா விற்பனை சம்பந்தமாக 54 வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டு 56 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 3,063 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 24 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 62 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் எப்போதும் பொதுமக்களின் நண்பனாகவே காவல்துறை செயல்படுகிறது. மக்கள் பணி செய்யவே காவல்துறையினர் உள்ளனர். சமூக வலைதளங்களில் காவல்துறை குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க... தொடர் குற்றச் செயல்கள்; 27 நாள்களில் 11 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!