தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரை கொலை வழக்கு ஒன்றில் விசாரணைக்காக அழைத்துச் சென்று சட்ட விரோத காவலில் வைத்து சாத்தான்குளம் காவல் துறையினர் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மகேந்திரன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மகேந்திரன் உயிரிழந்ததற்கு சாத்தான்குளம் காவல் துறையினர் அடித்து துன்புறுத்தியதுதான் காரணம். எனவே சாத்தான்குளம் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மகேந்திரனின் தாயார் வடிவு மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அதனடிப்படையில் வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக மகேந்திரனை தேடி நாங்குநேரியில் உள்ள அவருடைய மாமா தங்கவேலு வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்பொழுது வீட்டு முன்வாசல் கதவினை உடைத்து அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த அவர் சாத்தான்குளம் காவல் துறையினர் அத்துமீறல்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் மனு அளித்திருந்தார். அந்த மனுவின் பேரில் தங்கவேலு இன்று (ஜூலை 30) விசாரணைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலையில் நேரில் ஆஜரானார்.
யாக்கோபு ராஜ், பாதிக்கப்பட்டவர் இதேபோல் மற்றொரு சம்பவத்தில் ஆசீர்வாதபுரம் அருகே மீரான்குளத்தை சேர்ந்த யாக்கோபு ராஜ் என்பவரையும் சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகியோர் பொய் வழக்கில் கைதுசெய்து அவரை நிர்வாணமாக அடித்து துன்புறுத்தி உள்ளனர். பின்னர் வழக்கிலிருந்து யாக்கோபு ராஜை விடுவிப்பதற்கு லஞ்சம் பெற முயன்றதாகவும் கூறப்படுகிறது.
காவல் துறையின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட யாக்கோபு ராஜ் சாத்தான்குளம் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.
அம்மனு மீதான விசாரணை இன்று நடைபெறவிருந்த நிலையில் யாக்கோபு ராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். சாத்தான்குளம் காவல் துறையினர் மீது அடுத்தடுத்து குவியும் புகார் மனுக்களால் போலீசார் மீதான வழக்கு மேலும் சிக்கலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க...புதிய கல்விக் கொள்கை: தமிழ்நாடு அரசுக்கு தகவல் வரவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்!