தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர் வேல்ராஜ். இவர் தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாகவும் உள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சமீப காலமாக அதிகரித்துவரும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக மாவட்ட காவல் துறை சார்பில் ரவுடிகள் பட்டியல் தயாரிப்பதற்கு காவல் துறையினருக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.
அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்டியலில் வேல்ராஜின் பெயரும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதை அறிந்த வேல்ராஜ், அவருடைய ஆதரவாளர்களுடன் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலனை சந்தித்து ஒரு மனுவினை அளித்தார்.
இதைத்தொடர்ந்து அவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வேல்ராஜ் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் என்ற முறையில் வேல்ராஜின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தவிர அவர் மீது வேறு எந்த குற்ற வழக்குகளும் கிடையாது.
இந்நிலையில் காவல் துறையினர் தயாரித்துள்ள ரவுடிகள் பட்டியலில் வேல்ராஜ் பெயர் இடம் பெற்றிருப்பதாக தகவல் அறிந்தோம். இதனால் அவருக்கு காவல் துறையினர் மிகுந்த நெருக்கடியை கொடுத்து வருகின்றனர். குற்ற செயல்களில் ஈடுபடாத நிலையில் வேல்ராஜின் பெயரை ரவுடிகள் பட்டியலில் சேர்த்தது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து முறையிட்டோம். ரவுடிகள் பட்டியலில் இருந்து வேல்ராஜின் பெயரை நீக்கவும், காவல் துறையினர் அவருக்கு தொந்தரவு கொடுப்பதை நிறுத்த வலியுறுத்தியும் கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றனர்.