தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய பனிமய மாதா பேராலயத்தின் 439ஆவது ஆண்டுப் பெருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை, ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பக்தர்கள் இன்றி கொடியேற்றம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டீபன் ஆண்டகை, "பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயப் பெருவிழா, ஆண்டுதோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை 11 நாள்கள் விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு 439ஆவது ஆண்டுப் பெருவிழா வரும் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கரோனா ஊரடங்கால் பக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் நடைபெறவுள்ளது. அப்போது, அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.
தொடர்ந்து காலை 7 மணியளவில் பேராலயம் முன்புள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை ஆயர் ஏற்றி வைக்கிறார்.