லாரி டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஸ்தம்பித்த போக்குவரத்து தூத்துக்குடி: லாரியில் அதிக பாரம் ஏற்றி இருப்பதாக கூறி லாரி ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சுண்ணாம்புக்கல் ஏற்றிக் கொண்டு வேதாரண்யத்தைச் சேர்ந்த லாரி ஓடுநர் வெற்றிவேல் என்பவர் அறந்தாங்கி நோக்கி ஓட்டிக் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது தூத்துக்குடி துறைமுக சாலையில் அனல் மின் நிலைய குடியிருப்பு கேம்ப்-1 பகுதி அருகே வெற்றிவேல் ஓட்டி வந்த லாரியை மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸ் உள்ளிட்ட சிலர் வாகன சோதனைக்காக அரசு வாகனத்தில் வராமல் தனியார் வாகனத்தில் வந்து மறித்துள்ளனர்.
அப்போது லாரியில் கூடுதல் எடை ஏற்றியதாக மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸ் லாரி ஓட்டுநரை திட்டி உள்ளதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மோட்டார வாகன ஆய்வாளர் பெலிக்ஸ் மற்றும் அவருடன் வந்த சிலர் லாரி ஓட்டுநர் வெற்றிவேலை கடுமையாக ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இதில் அவரது மூக்கு, வாய் உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காயம் அடைந்த லாரி ஓட்டுநர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், லாரி ஓட்டுநரை மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட சிலர் கண்மூடித்தனமாக கொடூரமாக தாக்கியதைக் கண்டித்து தூத்துக்குடி துறைமுக சாலையில் அனல் மின் நிலைய குடியிருப்பு அருகே நூற்றுக்கணக்கான லாரி டிரைவர்கள் லாரிகளை சாலையில் நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாரி ஓட்டுநர்களின் மறியல் காரணமாக சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லாரி ஓட்டுநர்கள் சுமார் 3 மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த பகுதிக்கு தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையிலான காவல் துறையினர் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், சம்பந்தப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு பேர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என லாரி ஓட்டுநர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து லாரி ஓட்டுநர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், காவல் துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின் லாரி ஓட்டுநர்கள் வாகனத்தை எடுத்துச் சென்றனர். லாரி ஓட்டுநர்கள் போராட்டம் காரணமாக அந்தப் பகுதி சுமார் 3 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் உச்சபட்சம்? மக்களவையில் அறிக்கை தாக்கல்!