இந்தியாவில் கரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கு மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதுவரை கரோனா வைரசால் 4 பேர் உயிரிழந்தும், 244 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இது மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது. கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊரங்கிற்கு பிரதமர் மோடி வேண்டுகோள்விடுத்தார்.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை மக்கள் பொதுமக்கள், எதிர்க்கட்சிகள், அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள், தனியார் நிறுவனத்தினர், தன்னார்வ அமைப்புகள், தன்னாட்சி அமைப்புகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் வரவேற்றனர். அதன்படி தூத்துக்குடி வாழ் பொதுமக்கள், வணிகர்கள், தனியார் நிறுவனத்தினர் இந்த மக்கள் ஊரடங்கு உத்தரவை ஏற்று இன்று கடைகளை அடைத்து தங்களின் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
இதனால் தூத்துக்குடி சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் திருநெல்வேலி- பாளையங்கோட்டை சாலை, தூத்துக்குடி -புதிய துறைமுக சாலை, மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து முக்கியப் பகுதிகளிலும் கடைகள், உணவகங்கள், சந்தைகள், வாடகைக் கார் நிறுவனங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இரண்டு சுழற்சிமுறை பணிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் வெறிச்சோடிய சாலைகள் மக்கள் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. தூத்துக்குடியில் உள்ள அம்மா உணவகங்கள், பால் விற்பனை செய்யும் கடைகள், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், சில்லறை வியாபார கடைகளைத் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:கரோனா தடையை மீறி கோயிலில் திரண்டவர்கள் மீது வழக்குப்பதிவு