தூத்துக்குடி:தருவைகுளம் மீனவ கிராமத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த உதயகுமார் (வயது 31), தூத்துக்குடி வேம்பார் பகுதியை சேர்ந்த மைக்கேல்ராஜ் (வயது 21), அந்தோணி ஆன்சல் கிறிஸ்டோபர் (வயது 22), அதிசய பரலோக திரவியம் (வயது 25), மதுரையை சேர்ந்த மாதேஷ் குமார், தருவைகுளம் பகுதியை சேர்ந்த அந்தோணி செல்வசேகரன் (வயது 23), ஆதிநாராயணன் (வயது 20), மகேஷ்குமார் (வயது 24), சிலுவைபட்டி பகுதியை சேர்ந்த அன்பு சூசை மிக்கேல் (வயது 48), விக்னேஷ் (வயது 31), மணி மற்றும் சக்தி ஆகிய 12 பேரும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது புயலின் காரணமாக கடந்த அக்டோபர் 20ஆம் தேதி திசைமாறி மாலத்தீவு கடல் எல்லைக்குள் சென்றனர். இதையடுத்து 12 மீனவர்களையும் மாலத்தீவு கடலோர காவல் படையினர், கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் இந்தியா - மாலத்தீவு இரு நாடுகளுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதினர்.
மூன்று வருடங்களுக்கு முன்பு இதேபோல் தூத்துக்குடி மீனவர்கள் பிடிபட்டனர். ஆனால் அப்போதுள்ள மாலத்தீவு அரசு அவர்களை உடனடியாக விடுவித்தது. ஆனால் இப்போது மாலத்தீவுக்கும் இந்திய அரசுக்கும் இடையே பிரச்சினை இருப்பதாக கூறி மீனவர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது என்று மீனவர்கள் கூறி வந்தனர்.