தூத்துக்குடி:சர்வதேச மீனவர் தினம் இன்று (நவம்பர் 21) கொண்டாடப்படுகிறது. விவசாயம், மென்பொருள், கட்டுமானம் உள்ளிட்டப் பல்வேறு தொழில்களுக்கு ஈடாக அந்நிய செலாவணியை ஈட்டி, நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்கும் சக்தி மீன்பிடித் தொழிலுக்கும் இருப்பதாக கருதப்படுகிறது.
சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள அமலோற்பவ மாதா சிற்றாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் மீனவர்களின் கோரிக்கை கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மற்றும் அண்டை கிராமங்களில் இருந்து வந்த மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளைக் கூறினர்.
மேலும் மீனவர்களுக்கான கொடி ஏற்றப்பட்டு, நூலக ஒன்றின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவைத் தொடர்ந்து பேசிய பாதிரியார் ஜெயந்தன், ’விவசாயம், நதிக் கரையின் நாகரிகம், அதிக செலாவணியை ஈர்க்கிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடித்தொழில் அந்நிய செலவாணியை அதிகமாக ஈட்டித் தருகிறது. ஆனால், மத்திய அரசு மீனவர்களை ஒரு பொருட்டாக கருதவில்லை.
சர்வதேச மீனவர் நாள் கொண்டாட்டம் ராமேஸ்வர மீனவர்கள் தமிழுக்குப்பதில், இந்தி பேசினால் அவர்களின் பிரச்னைகள் உடனடியாகத் தீர்க்கப்பட்டு இருக்கக்கூடும். கச்சத்தீவை தாரை வார்த்தது சட்ட முறைப்படி செய்யப்பட்டது அல்ல. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, பண்டாரநாயக்காவிற்கு கையெழுத்து மூலமே அளிக்கப்பட்டது. இதனை, சட்ட ரீதியாக பிரச்னையை சரி செய்யலாம் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், மத்திய அரசு தமிழர்களை இரண்டாம் தரத்தில் வைத்து இருக்கின்றனர். மத்திய அரசு திட்டத்திற்கு முதல் எதிர்ப்புக் குரல் தமிழ்நாட்டில் இருந்து வருவதே அதற்குக் காரணம்’ என்று பாதிரியார் ஜெயந்தன் தெரிவித்தார். மேலும் அவர், ’கடல் வாழ் மசோதாவால் மீனவர்களுக்கு ஏற்ற காலம் இல்லை. ஆட்சியாளர்கள் நம்மை அறியாமையில் வைத்துள்ளார்கள். ஆகவே, மீனவர்கள் நாம் தான் நம் பிரச்னையைப் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்றார்.
தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்த மீனவர்கள், தூத்துக்குடி துறைமுகத்தில் 250 விசைப்படகுகள், 5 ஆயிரம் தொழிலாளர்கள், 10 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அடிப்படை கட்டமைப்புகள், சரியான மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி, ஓய்வுக் கூடம் மற்றும் மீனவர்களுக்கான அனைத்து வசதியும், செய்து தர வேண்டும் எனத் தெரிவித்தனர்.
மேலும் மீன்பிடித் துறைமுகத்தில் மழை, புயல் நிவாரணங்கள் குறித்து தகவல் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும்; மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்படும் பணம் அந்தந்த மாதங்களில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மீனவர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்த நிலையில், அதனை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி துறைமுகம் வந்து நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க:இந்திய தேர்தல் ஆணையராக பதவியேற்றார் அருண் கோயல்!