தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் என்ற ஊரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சுதந்திர விடுதலைப் போராட்ட வீரரும், ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் கடலில் கப்பல் விட்டு வாணிபம் செய்தவருமான வ.உ. சிதம்பரனார் பிறந்த விடுதலை மண். ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்குள்பட்ட பகுதிகள் அனைத்துமே மானாவாரி வேளாண் பகுதிகளாகும். பாசன வசதி இல்லாத இந்த தாலுகா பகுதியில் விவசாயிகள் நம்பியிருப்பது பருவமழையையும், கிணற்று நீரையும்தான். இப்பகுதியில் முக்கிய வேளாண் பயிர்களாக உளுந்து, சோளம், சூரியகாந்தி, பருத்தி, கேழ்வரகு, பாசிப்பயறு உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன.
உலகத்திற்கு உணவளிக்கும் விவசாயியின் பிரச்னைதான் தற்போது நம் நாட்டின் தீர்க்க முடியாத பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. விவசாயியின் தேவை என்பதைச் செவிவழி அறிகையில் சிறிதாய் தோன்றும் விஷயம்கூட செயலில் தீர்வு காண்பதற்கு அவர்கள் போராட வேண்டியுள்ளதை கண்கூட பார்க்க முடிகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்குள்பட்ட ஜம்புலிங்கபுரம் விவசாயிகளின் பிரச்சினையும் அந்த வகைதான். என்ன, இங்கு அவர்கள் எதிர்த்துப் போராடுவது அலுவலர்களை அல்ல. அலுவலர்களின் துணையோடு அத்துமீறும் அவர்களைப் போன்ற வர்க்கத்தினரைத்தான்.
தூத்துக்குடி மாவட்டத்தின் மிகவும் பரபரப்பான ஊர்களில் ஒன்றான புதியம்புத்தூர் ஊரை அடுத்துள்ள கிராமமே ஜம்புலிங்கபுரம். பெரும்பாலும் பட்டியலினத்தவர்களை அதிகமாக கொண்ட இவ்வூர் மக்களின் முக்கியத் தொழில் மானாவாரி வேளாண்மை. இந்த ஊரைச் சுற்றிலும் கரிசல்காடு அமைந்திருப்பதால் ஊர் எப்பொழுதுமே வெப்ப பாங்கான இடமாக காட்சியளிக்கும் கானகமே. ஜம்புலிங்கபுரம், செட்டியூரணி, பொட்டல்காடு, பேரூரணி, செக்காரக்குடி உள்பட 15 சுற்றுவட்டார கிராமங்களுக்கு புதியம்புத்தூரில் உள்ள மலர் குளத்திலிருந்து ஆழ்துளை உறைகிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
தற்பொழுது குளத்தில் நீர் இல்லாத காரணத்தால் வறண்ட பொட்டல்காடாக காட்சியளிக்கும் மலர் குளத்திற்கு மழைநீர் வடிகால் மூலமாகவே நீர் வந்து சேர்கிறது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட மலர் குளமானது புனரமைக்கப்பட்டு 20 வருடங்களுக்கும் மேல் ஆவதால் குளத்தில் நீர் தேங்குவது அரிதினும் அரிது. இருப்பினும் அவ்வபொழுது பொய்க்காது பெய்யும் பருவமழைதான் குளத்தின் நிலத்தடி நீரைத் தக்கவைத்துக் கொள்வதற்கு உதவுவதால் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு குடிநீருக்கு மட்டும் பஞ்சமில்லாமல் பிழைப்பு நடத்த முடிகிறது.
மற்றபடி மானாவாரிப் பயிருக்குத் தேவையான நீர் அனைத்தும் பருவமழை கருணையாலே கிடைக்கின்றன. இந்தச் சூழலில் ஜம்புலிங்கபுரம்-செட்டியூரணி ஊருக்கு இடையே மங்கள பெரும்பாதை சாலை முக்கியப் போக்குவரத்துச் சாலையாக விளங்கிறது. இந்தச் சாலையின் இருபுறங்களிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கரிசல்காட்டை மட்டுமே காணமுடியும்.
பருவமழை காலங்களில் மங்கள பெரும்பாதை வழியே பெருக்கெடுத்து ஓடும் நீர் இருபுறங்களிலும் கரிசல் காட்டின் பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. மழை காலங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் இந்தச் சாலை இரு ஊர்களின் இணைப்புப் பாலமாக விளங்குகிறது. வேளாண்மை பணிகளுக்கும், ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் பயணப்படுவதற்கும் நேரத்தை மிச்சப்படுத்தும் குறுக்கு சாலையாக மங்கள பெரும்பாதை விளங்குகிறது.
இந்தச் சாலையின் முக்கியத்துவம் கருதி, ஜம்புலிங்கபுரம்-செட்டியூரணி ஊர் பொதுமக்கள் வேளாண்மைக்கும் ஏனைய பயன்பாட்டிற்கும் உதவிடும் வகையில் சிமெண்ட் சாலையாக மாற்றித் தரும்படி அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர். இதுதொடர்பாக கிராம சபைக் கூட்டம், ஜமாபந்தி, மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட பலவற்றிலும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதன் பயனாக கடந்த ஆண்டு ஊர்மக்களின் மனு பரிசீலிக்கப்பட்டு மங்கள பெரும்பாதையில் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு சாலை அமைப்பதற்கான பணி கிடப்பில் போடப்பட்டு தற்போது வரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. அரசாங்கத்தால் கையில் எடுக்கப்பட்டு பாதியில் கைவிடப்பட்ட சாலை பணியை முடிக்க வலியுறுத்தி விவசாயிகள் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்க தற்போது இவர்களுக்கு புதிய தலைவலியாக உருவாகி உள்ளது.
அதாவது வெகுவிரைவில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையால் மலர் குளத்திற்கு தண்ணீர் சேமிக்க வேண்டுமென புதியம்புத்தூரை சேர்ந்த முக்கிய பஞ்சாயத்தார்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக மங்கள பெரும்பாதையில் பருவ மழையின்போது தேங்கும் மழைநீரை ஓடை அமைத்து மலர் குளத்திற்கு கொண்டு வர முடிவு செய்து அதற்கான பணிகளும் நடைபெற்றுவருகின்றன.