தூத்துக்குடி: முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப்(VAO) பணிபுரிந்து வந்தவர் லூர்து பிரான்சிஸ். இவரை கடந்த ஏப்.25ம் தேதி மர்ம நபர்கள் அலுவலகத்தில் புகுந்து அரிவாளால் ஓட ஓட சரமாரியாக வெட்டினர். இதில் காயமடைந்த லூர்து பிரான்சிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் அதிக அளவில் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினரிடம் வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் புகார் அளித்துள்ளார். அந்த மணல் கடத்தலில் சம்பந்தப்பட்ட கலியாவூர் வேதகோயில் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் ராம சுப்பிரமணியன் (41) மற்றும் முருகன் மகன் மாரிமுத்து (31) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த இருவரும் அவரை பழிவாங்கும் நோக்கில் வெட்டிக் கொலை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை மற்றும் ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்திருந்தார்.