தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் தென்திருப்பேரை குரங்கணி சாலை, பிள்ளையார் கோயில் தெரு, மாவடிப்பண்ணை ஆகிய நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (ஜூன் 2) வரை 12,035 நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 277 நபர்களுக்கு கரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 119 நபர்களும், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவர் என 120 நபர்கள் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கேரளா, குஜராத், பிகார் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வந்த 177 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் தென்திருப்பேரை மற்றும் காயல்பட்டிணம் பகுதியில் அதிகமான நபர்கள் கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தென்திருப்பேரை பகுதியில் 30 நபர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை ஆராயும்போது 22 நபர்கள் சென்னையில் இருந்து இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்கள். இவர்கள் மூலம் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட நபர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அதேபோல் காயல்பட்டிணம் பகுதியில் 9 நபர்களுக்கு கரோனா தொற்று நோய் பரவியுள்ளது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களின் முதன்மை தொடர்பாளர்கள் மற்றும் இரண்டாம் நிலை தொடர்பாளர்கள் அனைவரும் கண்டறியப்பட்டு மாதிரிகள் சேகரித்து பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது என்றார்.