கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 24) மாலை 6 மணியிலிருந்து 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, "தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல் குறித்து ஏற்கனவே அரசு அலுவலர்கள், பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வேளையில் அத்தியாவசிய தேவைகளுக்காக காய்கறி, பால், மளிகை பொருள்கள், மருந்தகங்கள், சிறு உணவகங்கள் திறந்துவைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50 விழுக்காடு தொழிலாளர்களுடன் முக்கிய தொழிற்சாலைகள் இயங்க விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவுறுத்தலின் படி, மார்ச் 1ஆம் தேதிக்குப் பின் வெளிநாட்டிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு திரும்பிய 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களின் கைகள், வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கரோனா சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 170 படுக்கைகள் கொண்ட தனி சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தின் முக்கிய இடங்களான கோவில்பட்டி, விளாத்திகுளம், காயல்பட்டினம், திருச்செந்தூர் மருத்துவமனைகளிலும் கரோனா வைரஸ் சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.