தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது பயன்படுத்தப்படும் பொருள்களில் முக்கிய பங்கு வகிப்பது மஞ்சள் குலை. பொங்கலுக்கான பொருள்கள் வாங்கும் போது, மங்களகரமாக முதலில் வாங்குவது மஞ்சள் குலைதான். வீட்டில் பொங்கல் வைக்கும் போதும், பொங்கல் பொங்கி முடிந்ததும் அடுப்பிலிருந்து பானையை இறக்குவதற்கு முன்பும் மஞ்சள் குலையை சுற்றி சூரியனை வணங்குவது வழக்கம்.
குறிப்பாக, மஞ்சள் கிருமிநாசினி பொருள் என்பதால், பொங்கல் முடிந்த பின்னும் மஞ்சள் குலைகளை வீட்டின் ஒரு பகுதியில் கட்டித் தொங்கவிடுவது வழக்கம். இதனால், வீட்டில் ரம்மியமாக மஞ்சள் மணப்பதுடன் பூச்சிகளோ, விஷ ஜந்துக்களோ வீட்டுக்குள் வராது என்பது நம்பிக்கை.
இத்தனை அம்சங்கள் நிறைந்த மஞ்சள் குலைகள், தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி அருகே உள்ளே சாயர்பரம், சக்கமாள்புரம், சிவஞானபுரம், சேர்வைக்காரன் மடம், சிவத்தையாபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. ஆறு மாத கால பயிரான இவை, பொங்கலுக்கு மூன்று தினங்களுக்கு முன்பாக அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்காக உள்ளூர், வெளியூர் சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி அதன் சுற்று வட்டார கிராமங்களில் மஞ்சள் குலை சாகுபடி நடைபெறுவது பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஆடி மாதம் விதைக்கப்பட்டு மார்கழி மாதத்தில் அறுவடை செய்யப்படும் மஞ்சள் குலை, செம்மண் பூமியில் மட்டுமே வளரும். மஞ்சள் குலை சாகுபடிக்கென ஈரோட்டு சந்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விதைப்பயிர்களை வாங்கிவந்து தூத்துக்குடி விவசாயிகள் பயிரிடுகின்றனர்.