தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

20 நாட்களுக்குப் பிறகு திருச்செந்தூரில் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை! - Etvbharat

Senthur Express train: தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக 20 நாட்களுக்குப் பிறகு, நேற்று இரவு திருச்செந்தூரில் இருந்து ரயில் சேவை தொடங்கியது. தாமதமான அறிவிப்பால் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் குறைவான பயணிகளுடன் சென்றது.

20 நாட்களுக்கு பிறகு திருச்செந்தூரில் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை
20 நாட்களுக்கு பிறகு திருச்செந்தூரில் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 1:41 PM IST

தூத்துக்குடி: கடந்த ஆண்டு டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை தொடர்ச்சியாக பெய்ததன் காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. நீர்நிலைகளிலிருந்து வெளியேறிய தண்ணீர் மற்றும் மழைநீர் என எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

இது போன்ற சூழ்நிலையில், திருச்செந்தூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி மாலை வழக்கம்போல் திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டது. பலத்த மழைக்கு இடையே ரயில் புறப்பட்ட நிலையில், திருச்செந்தூரிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தடைந்தபோது, ரயில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ரயில் தண்டவாளத்தைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்து கொண்டதாலும், மோசமான வானிலை காரணமாகவும், ரயிலை இயக்க முடியாமல் அங்கேயே நிறுத்தி வைத்தனர். தொடர்ந்து மழை நீடித்ததால், ரயில்வே நிலையத்தைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்து கொண்டதாலும், ரயிலிலிருந்த சுமார் 800 பயணிகள் வெளியேற முடியாமல் ரயிலுக்குள்ளேயே இரண்டு நாட்கள் பரிதவித்தனர். கடும் போராட்டத்திற்கு இடையே மீட்புக் குழுவினர், அவர்களை பாதுகாப்பாக மீட்டு காப்பாற்றினர்.

இதற்கிடையில் பலத்த மழை காரணமாக, திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் வழித்தடத்தில் ஆழ்வார்திருநகரி, செய்துங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ரயில் தண்டவாளங்கள் அடியில் மண் அரிப்பு ஏற்பட்டு, வழித்தடம் பாதிக்கப்பட்டது. தண்டவாளங்களும் வழித்தடத்திலிருந்து விலகின. இதையடுத்து, திருநெல்வேலி - திருச்செந்தூர் வழித்தடத்தில் கடந்த 20 நாட்களாக ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து, மழையால் சேதம் அடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சாக நடைபெற்றன. குறிப்பாக செய்துங்கநல்லூர், ஆழ்வார்திருநகரி பகுதிகளில் தண்டவாளங்களுக்கு அடியில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில், அங்கு புதிதாக மண் மற்றும் கற்கள் கொட்டப்பட்டு, தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு வந்தது. திருநெல்வேலி - திருச்செந்தூர் வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் முடிவு பெற்ற நிலையில், நேற்று (ஜன.6) மின்சார ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து, திருச்செந்தூரில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, திருச்செந்தூரில் இருந்து இரவு 8.25 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. தாமதமான அறிவிப்பால் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது.

வழக்கமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் 500 பேர் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்வதாகக் கூறப்படும் நிலையில், 150 பேர் பயணம் செய்தனர். இதனால் முன்பதிவு இல்லாத பயணிகள் பெட்டிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், இன்று (ஜன.7) காலை 7.20 மணிக்கு திருநெல்வேலி பயணிகள் ரயில் மட்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. காலை 8.15 மணி முதல் வழக்கம்போல் அனைத்து ரயில்களும் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ள நிலையில், வழக்கம்போல் ரயில் இயக்கப்பட்டது.

இதையும் படிங்க:பொங்கலோ..பொங்கல்.. புத்தாடை உடுத்தி பாரம்பரியப்படி பொங்கலிட்டு அசத்திய வெளிநாட்டினர்..!

ABOUT THE AUTHOR

...view details