திருச்செந்தூர்:தூத்துக்குடி மாவட்டம் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு மட்டுமே காணப்படும் செம்மண் நிற பாலைவனம் போன்ற மணல் பரப்பு தனித்துவமானது. நடிகர் சூர்யாவின் சிங்கம், தனுஷின் அசுரன் போன்ற திரைப்படங்களும் இங்கு படம் பிடிக்கப்பட்டுள்ளன. தேரிக்காடு என அழைக்கப்படும் இந்த செம்மண் காட்டின் நடுவே கற்குவேல் அய்யனார் கோயில் அமைந்துள்ளது.
நூற்றாண்டுகளுக்கு முன்பு ஊருக்குள் புகுந்து கொள்ளை அடித்துச் சென்ற கள்வர்களை, கற்குவேல் அய்யனார் வெட்டிச்சாய்த்த இடமாக இது கருதப்படுகிறது. இதனை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் குங்குமம் பூசப்பட்ட இளநீரை கள்வராக கருதி, பூசாரி வெட்டுவது வழக்கம். இளநீர் தெளிக்கப்பட்ட தண்ணீரை வீட்டில் வைத்திருந்தால் நல்லது என கருதும் மக்கள் செம்மண்ணையே பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான கள்ளர் வெட்டுத் திருவிழா கடந்த நவம்பர் 17ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அய்யனாா் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் கள்ளர் வெட்டு திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கள்ளர் வெட்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளர் வெட்டு நிகழ்ச்சி கோயில் பின்புறமுள்ள தேரி மணல் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்களின் கடைகளில் திருடி தொல்லை கொடுத்து வரும் கள்ளர்களை தண்டிக்கும் விதமாக அய்யனார் அருள் வந்து இளநீரை கள்ளராக பாவித்து இளநீர் வெட்டப்பட்டது.