தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (38) மெரைன் இன்ஜினியர். இவரது நண்பர், பிரையண்ட் நகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த விவேக் (38). இவர் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 15ஆம் தேதி தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள சிவந்தாகுளம் பகுதியில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கே இருசக்கர வாகனத்தில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் அவர்களை சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி இரட்டைக் கொலை வழக்கு - 5பேர் கைது - முருகேசன், விவேக்
தூத்துக்குடி: கப்பல் இன்ஜினீயர் உட்பட இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்- தம்பி உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்த கும்பல் சிவந்தாகுளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதாகவும், அதனை கொலையான இருவரும் தட்டிக்கேட்டதாகவும், இதற்காக இக்கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இக்கொலை தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொலையாளிகளை பிடிப்பதற்காக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இக்கொலையில் தொடர்புடைய தூத்துக்குடி சிவந்தாகுளத்தைச் சேர்ந்த மாரிமுத்து (22), மாரிசெல்வம் (25), வேல்முருகன் (20), மகாலிங்கம் (20), முகேஷ் (18) ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.